அவிவா காப்பீட்டு நிறுவனத்துக்கு ரூ.43 கோடி வரி ஏய்ப்பு நோட்டீஸ்
புதுடில்லி:போலி ஏஜென்டுகள் பெயரில், 218 கோடி ரூபாயை கமிஷனாக வழங்கி, 43 கோடி ரூபாய் அளவுக்கு வரி ஏய்ப்பு செய்திருப்பதாக, 'அவிவா இந்தியா' காப்பீட்டு நிறுவனத்திற்கு வருமான வரித்துறை நோட்டீஸ் அனுப்பியுள்ளது.பிரிட்டனைச் சேர்ந்த அவிவா நிறுவனம், இந்தியாவில் 'டாபர் இன்வெஸ்ட்' நிறுவனத்துடன் இணைந்து, 74 சதவீத பங்குடன், காப்பீடு வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 2017 முதல் 2023 வரையான ஆண்டுகளில், இந்நிறுவனத்தின் கணக்குகளை ஜி.எஸ்.டி., புலனாய்வு இயக்குனரகம் ஆய்வு செய்ததில், அனுமதிக்கப்பட்ட தொகையை விட பலமடங்கு அதிகமாக, ஏஜென்டுகளுக்கு கமிஷன் வழங்கியது தெரியவந்தது.மேலும், ஏஜென்டுகளின் குடும்பத்தினர், நண்பர்கள் பெயரில் போலியாக, வினியோகஸ்தர் என கணக்கு துவங்கி, எந்த சேவையும் பெறப்படாமலே, ரொக்கமாகவும் வேறு வழிகளிலும் அவிவா பணம் வழங்கி வந்துள்ளது.பதிலுக்கு அந்த நபர்கள், நிறுவனத்திற்கு பயிற்சி அளித்ததாகவும், சந்தைப்படுத்தல் மற்றும் விளம்பர பணிகளில் ஈடுபட்டதாகவும் ரசீதுகள் தயாரித்து, வரி ஏய்ப்பு நடந்துள்ளது என அதிகாரிகள் தரப்பில் கூறப்படுகிறது.இப்படி மோசடி செய்ததை கண்டுபிடித்த அதிகாரிகள், 43 கோடி ரூபாய் வரி ஏய்ப்பு நடந்ததாக கூறி, விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்பியுள்ளனர்.