உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / கல்லுாரி விடுதி மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா விற்பனை

கல்லுாரி விடுதி மாணவர்களை குறிவைத்து நடக்கும் கஞ்சா விற்பனை

சென்னை:வெளி மாநில மாணவர்கள் அதிகம் தங்கி படிக்கும் கல்லுாரி விடுதிகள், வீடுகளை குறி வைத்து, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் விற்பனை நடப்பதால், கண்காணிப்பை தீவிரப்படுத்த, உளவு பிரிவு போலீசார் எச்சரித்துள்ளனர்.சமீபத்தில், கோவை புறநகர் பகுதிகளில் மாணவர்கள் தங்கி படிக்கும் செட்டிபாளையம், நீலாம்பூர், சூலுார் உள்ளிட்ட இடங்களில், போலீசார் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர். அப்போது, ஆறு கிலோ கஞ்சா, நான்கு கத்திகள், திருடப்பட்ட, 42 இரு சக்கர வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. மாணவர்கள் என்ற போர்வையில் சட்ட விரோத செயலில் ஈடுபட்டு வந்த, எட்டு பேர் கைது செய்யப்பட்டனர்.அதேபோல, சென்னை பொத்தேரி, வல்லாஞ்சேரி, தைலாவரம், காவனுார், கோனத்தி, காட்டாங்கொளத்துார் உள்ளிட்ட பகுதிகளில், 500க்கும் மேற்பட்ட தனியார் விடுதிகள் மற்றும் வீடுகளில் மாணவர்கள் தங்கி உள்ளனர்.அந்த இடங்களில், ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட போலீசார் சோதனையில் ஈடுபட்டு, அரை கிலோ கஞ்சா, கஞ்சா சாக்லேட், கஞ்சா எண்ணெய் உள்ளிட்ட பொருட்களை பறிமுதல் செய்தனர்; 21 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்களில், ஒரு மாணவி உட்பட 11 பேர் சொந்த ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். இந்த இரு சம்பவங்களுக்கு பின், மாநிலம் முழுதும், பல்கலை, கல்லுாரி விடுதிகள் மற்றும் வெளி மாநில மாணவர்கள் தங்கி உள்ள வீடுகளில் நடக்கும் சட்ட விரோத செயல்கள் குறித்து, ரகசிய தகவல்கள் சேகரிக்க வேண்டும் என, உளவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்டது.அவர்கள், டி.ஜி.பி., அலுவலக போலீஸ் உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை தாக்கல் செய்துள்ளனர். அதில், மாணவர்களை மையப்படுத்தி, கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் சப்ளை அதிகம் நடப்பதை உறுதி செய்துள்ளனர்.உளவு போலீசார் கூறியதாவது:மாநிலம் முழுதும் உள்ள, கலை அறிவியல், பொறியியல், மருத்துவம் என, பல துறை சார்ந்த மாணவர்கள் தங்கி படிக்கும் விடுதிகள், வீடுகளில் ரகசிய விசாரணை நடத்தப்பட்டது. மணிப்பூர், உ.பி., மற்றும் மேற்கு வங்கம், ம.பி., மாணவர்களே போதை பொருள் விற்பனையில் ஈடுபட்டு வருகின்றனர். கோவா மற்றும் பெங்களூருவில் இருந்தும் போதை பொருள் கடத்தல் நடக்கிறது. வீடுகளில் தங்கி உள்ள மாணவர்கள், இரவு பார்ட்டிகளில் கஞ்சா உள்ளிட்ட போதை பொருள் பயன்படுத்துகின்றனர். அப்படித்தான் ம.பி., மாணவி போதையில் தள்ளாடியபடி மீட்கப்பட்டார். மாணவ -- மாணவியரை மையப்படுத்தி, போதை பொருள் சப்ளை நடப்பதால் கல்லுாரிகளுக்கு நேரடியாக சென்று, கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என எச்சரித்து உள்ளோம். மாணவர்களுக்கு வீடு வாடகைக்கு விடுவோர், கட்டாயம் அருகில் உள்ள, காவல் நிலையங்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். தவறினால், அவர்கள் மீது சட்ட ரீதியாக நடவடிக்கை எடுக்கப்படும்.இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

புதிய வீடியோ