சென்னை: ரகசிய பயிற்சி மையம் நடத்தி, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' பயங்கரவாத அமைப்புக்கு ஆள் சேர்த்தது தொடர்பாக, கெமிக்கல் இன்ஜினியர் உட்பட ஆறு பேரிடம், என்.ஐ.ஏ., அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்தவர் ஹமீது உசேன்; கெமிக்கல் இன்ஜினியர். சென்னை அண்ணா பல்கலையில் கவுரவ பேராசிரியராக பணியாற்றி உள்ளார். இவரின் தந்தை அகமது மன்சூர், இளைய சகோதரர் அப்துல் ரஹ்மான். மூவரும், பல நாடுகளில் தடை செய்யப்பட்ட ஹிஸ்ப் உத் தஹ்ரீர் என்ற பயங்கரவாத அமைப்புக்கு ஆட்களை சேர்த்துள்ளனர்.இதற்கு, செங்கல்பட்டு மாவட்டம் செம்பாக்கத்தைச் சேர்ந்த முகமது மவுரிஸ், சேலையூர் காதர் நவாஸ் ஷெரிப், சென்னை தண்டையார்பேட்டையைச் சேர்ந்த அகமது அலி உமரி ஆகியோர் உடந்தையாக இருந்தனர். ஆறு பேரும் வெளிநாடுகளில் உள்ள பயங்கரவாதிகளுடன் தொடர்பில் இருந்துள்ளனர்.அவர்கள் வகுத்து தந்த சதித் திட்டத்தின்படி செயல்பட்டுள்ளனர். ஆறு பேரையும், சென்னை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர். பின், இந்த வழக்கு, என்.ஐ.ஏ., என்ற தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரணைக்கு ஒப்படைக்கப்பட்டது.அவர்கள், தஞ்சாவூர், திருச்சி என, பல மாவட்டங்களில் ஹமீது உசேன் கூட்டாளிகள் வீடுகளில் சோதனை நடத்தி, முக்கிய ஆவணங்களை கைப்பற்றினர். அதன் அடிப்படையில் ஆறு பேரையும், சென்னை பூந்தமல்லியில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி, ஆறு நாள் காவலில் எடுத்து விசாரித்து வருகின்றனர்.அவர்களிடம், சென்னை ராயப்பேட்டை ஜானி ஜான்கான் தெருவில், 'மாடர்ன் எசன்சியல் எஜுகேஷனல் டிரஸ்ட்' என்ற பெயரில் ரகசிய பயிற்சி மையம் நடத்தியது பற்றியும், அங்கு வெடிகுண்டு தயாரிப்பு, ஆயுதப் பயிற்சி அளித்தது குறித்தும் விசாரித்து வருகின்றனர். ஹமீது உசேன் கூட்டாளிகள், கரூரிலும் ரகசிய பயிற்சி மையம் நடத்தியது தெரிய வந்துள்ளது.