வழக்கில் இருந்து விடுவிக்க கோரிய செந்தில் பாலாஜியின் மனு வாபஸ்
சென்னை: அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக் கோரி, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்ததை தொடர்ந்து, மனுவை தள்ளுபடி செய்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.அ.தி.மு.க., ஆட்சியின்போது, போக்குவரத்து துறை அமைச்சராக செந்தில் பாலாஜி பதவி வகித்தார். போக்குவரத்து துறையில் பணி நியமனம் பெற்று தருவதாக, பலரிடம் பணம் பெற்று மோசடி செய்ததாக, செந்தில் பாலாஜி உள்ளிட்டோருக்கு எதிராக வழக்குப்பதிவு செய்யப்பட்டது. அதைத்தொடர்ந்து, சட்டவிரோத பண பரிமாற்ற தடை சட்டத்தின் கீழ், அமலாக்கத்துறையும் நடவடிக்கை எடுத்தது. இந்த வழக்கில், கடந்த ஆண்டு ஜூனில், செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். தள்ளுபடி
இந்த வழக்கில், அமலாக்கத்துறை, சென்னை முதன்மை செஷன்ஸ் நீதிமன்றத்தில், குற்றப்பத்திரிகை தாக்கல் செய்தது. இந்த வழக்கில் இருந்து தன்னை விடுவிக்க கோரி, செந்தில் பாலாஜி தாக்கல் செய்த மனுவை, முதன்மை செஷன்ஸ் நீதிமன்றம் தள்ளுபடி செய்தது. அவருக்கு எதிராக குற்றச்சாட்டுக்களும் பதிவு செய்யப்பட்டன. இந்நிலையில், வழக்கில் இருந்து விடுவிக்க மறுத்ததை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் செந்தில் பாலாஜி மனு தாக்கல் செய்தார்.மனு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அமர்வில், கடந்த வாரம் விசாரணைக்கு வந்தபோது, அமலாக்கத்துறை சார்பில், கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் சுந்தரேசன் ஆஜராகி, ''விசாரணை நீதிமன்றத்தில் சாட்சி விசாரணை துவங்கி விட்டது,'' என்றார். உத்தரவு
இதையடுத்து, விசாரணையை தள்ளி வைத்து, விசாரணை நீதிமன்றத்தில் நடக்கும் விசாரணைக்கு எந்த தடங்கலும் இல்லை என, நீதிபதிகள் தெரிவித்தனர்.வழக்கு, நேற்று விசாரணைக்கு வந்தபோது, செந்தில் பாலாஜி தரப்பில் வழக்கறிஞர் கவுதமன் ஆஜராகி, சாட்சி விசாரணை துவங்கி விட்டதால், வழக்கில் இருந்து செந்தில் பாலாஜி விடுவிக்கக் கோரும் மனுவை வாபஸ் பெறுவதாக தெரிவித்தார். அதை ஏற்று, மனுவை தள்ளுபடி செய்து, நீதிபதிகள் உத்தரவிட்டனர்.