உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வங்கக்கடலில் புயல் சின்னம்: சில நாட்களுக்கு மழை நீடிக்கும்

வங்கக்கடலில் புயல் சின்னம்: சில நாட்களுக்கு மழை நீடிக்கும்

சென்னை : வங்கக்கடலில் உருவான காற்றழுத்த தாழ்வுப் பகுதி, புயல் சின்னமாக வலுவடைந்து வருவதால், தமிழகத்தின் வட மாவட்டங்களில், அடுத்த சில நாட்களுக்கு இடி மின்னலுடன் மழை நீடிக்கும் என, சென்னை வானிலை ஆய்வு மையம் அறிவித்து உள்ளது.

அந்த மையம் நேற்று வெளியிட்ட அறிக்கை:

கடந்த வாரம் வங்கக்கடலில், ஆந்திர கரைக்கு அப்பால், மத்திய மேற்கு மற்றும் வடமேற்கு பகுதியில், காற்றழுத்த தாழ்வுப் பகுதி உருவானது. இது, படிப்படியாக காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுவடைந்துள்ளது.

தீவிரமடையும்

நேற்று காலை நிலவரப்படி, ஆந்திர மாநிலம் கலிங்கபட்டினத்துக்கு கிழக்கே, 280 கி.மீ., தொலைவிலும், ஒடிசா மாநிலம் கோபால்பூருக்கு கிழக்கு மற்றும் தென்கிழக்கே, 230 கி.மீ., தொலைவிலும் நிலை கொண்டுள்ளது. அது இன்று மேலும் வலுவடைந்து, ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாக, ஒடிசா மற்றும் மேற்குவங்க கரையை நெருங்கும். இந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம், ஒடிசாவின் புரி மற்றும் மேற்கு வங்கத்தின் தீகா இடையே இன்று மாலை அல்லது இரவில் கரையை கடக்கலாம். இதன் காரணமாக, தமிழகத்தின் ஒரு சில இடங்களில், தென்மேற்கு பருவமழை தீவிரமடையும். தமிழகத்தில் சில இடங்கள் மற்றும் புதுச்சேரியில், இன்று மணிக்கு, 40 கி.மீ., வேகத்தில் பலத்த தரைக்காற்று வீசும்; இடி மின்னலுடன் மிதமான மழை பெய்ய வாய்ப்பு உள்ளது. திருவள்ளூர் முதல் திருவண்ணாமலை வரையிலான பகுதிகளுக்கு மழை வாய்ப்பு காணப்படுகிறது. சென்னை மற்றும் புறநகர் பகுதிகளில், அடுத்த இரு நாட்களுக்கு வானம் மேகமூட்டமாக காணப்படும்; ஒரு சில இடங்களில் இடி மின்னலுடன் லேசான அல்லது மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளது.

எச்சரிக்கை

மன்னார் வளைகுடா, தென்தமிழக கடலோரம், குமரிக்கடல் பகுதிகளில், இன்று மணிக்கு, 55 கி.மீ., வேகத்திலும்; இடையிடையே, 65 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசக்கூடும். வடமேற்கு அதை ஒட்டிய மத்திய மேற்கு வங்கக்கடல் பகுதியில், மணிக்கு, 60 கி.மீ., வேகத்திலும், இடையிடையே, 70 கி.மீ., வேகத்திலும் சூறாவளி காற்று வீசலாம். மீனவர்கள் இப்பகுதிக்கு செல்ல வேண்டாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

'யாகி' புயலின் தாக்கம்?

தன்னார்வ வானிலை ஆய்வாளர்கள் கூறியதாவது:தென்சீன கடலில் உருவான, 'யாகி' புயல் நேற்று முன்தினம், வியட்நாமில் கரையை கடந்தது. அதன்பின், லாவோஸில் கரையை கடக்கிறது. இந்த புயல் வலுவிழந்து காற்றழுத்த தாழ்வுப் பகுதியாக மாறி, தற்போது வங்கக்கடலில் உருவாகி உள்ள காற்றழுத்த தாழ்வு மண்டலத்தை மேலும் வலுவாக்கும். அதன் தாக்கத்தால், ஒடிசா, மேற்கு வங்கம் உள்ளிட்ட மாநிலங்களில், தென்மேற்கு பருவமழை மேலும் தீவிரமடையலாம். அதே சமயத்தில், காற்றழுத்த தாழ்வு மண்டல பகுதியில், நீராவியை சுமந்த காற்று அதிகமாக காணப்படுகிறது. வடக்கில் இருந்து தெற்கு நோக்கி வீசும் குளிர்ந்த காற்றால், தமிழகத்தின் வட மாவட்டங்களில் மிதமான மழை தொடர வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர்கள் கூறினர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !