சென்னை:சமூக வலைதளம் வாயிலாக பிளவு ஏற்படுத்தும் வகையில் செயல்பட்ட மேலும் மூன்று பேரை, மத்திய குற்றப்பிரிவின் தனிப்பிரிவு போலீசார் நேற்று சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.சென்னை ராயப்பேட்டையைச் சேர்ந்த டாக்டர் ஹமீது உசேன், 'யு டியூப்' சேனலில் சர்ச்சை கருத்துகளை பதிவிட்டு வந்தது தெரிய வந்தது. அவருக்கு ஆதரவாக செயல்பட்டு வந்த அவரது தந்தை மன்சூர் மற்றும் இளைய சகோதாரர் அப்துல் ரஹ்மானை, போலீசார் கைது செய்து செய்தனர். இவர்கள் தடை செய்யப்பட்ட, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' இயக்கத்துக்கு ஆதரவாக செயல்பட்டுள்ளனர்.இவர்கள் ரகசியக் கூட்டங்களை நடத்தி, பல இளைஞர்களை மூளைச்சலவை செய்து வந்துள்ளனர். இவர்களின் கூட்டத்தில் பங்கேற்றத்துடன், ஆதரவாக இருந்ததாக, செம்பாக்கத்தைச் சேர்ந்த காதர் நவாப் ஷெரிப், 35, முகமது மோரீஸ், 36, மற்றும் மேடவாக்கத்தைச் சேர்ந்த அகமது அலி உமாரி, 46, ஆகிய மூவரையும் நேற்று சுற்றி வளைத்துக் கைது செய்தனர்.சென்னை மத்திய குற்றப்பிரிவு அலுவலகத்தில் மூன்று பேரிடமும் கிடுக்கிப்பிடி விசாரணை நடக்கிறது. மேலும், சென்னை தண்டையார்பேட்டையிலும் சிலரிடம் போலீசார் விசாரித்து வருகின்றனர்.இந்த தொடர் விசாரணையில் ரகசிய கூட்டத்தில் பங்கேற்ற மற்றும் பயங்கரவாத அமைப்புகளுடன் தொடர்பில் இருக்கும் மேலும் பலர், கைது செய்யப்படலாம் என, போலீசார் தெரிவித்தனர். வழக்கு மாற்றம்
மத்திய குற்றப்பிரிவு போலீசார் கூறியதாவது: பல நாடுகளில் தடை செய்யப்பட்ட இயக்கமான, 'ஹிஸ்ப் உத் தஹ்ரீர்' இயக்கத்தின் கொள்கை கோட்பாடுகளில் ஈர்க்கப்பட்டு, அக்கொள்கைகளை பரப்பும் பணியில் ஹமீது உசேன் தவிர, பலரும் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்துள்ளது. அவர்கள் குறித்தும் விசாரித்து வருகிறோம். தேவைப்பட்டால், அவர்கள் மீதும் கைது நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சென்னை மத்திய குற்றப் பிரிவு போலீஸ் விசாரணையில் இருக்கும் இந்த வழக்கை, தமிழக காவல் துறையில் சமீபத்தில் ஏற்படுத்தப்பட்டுள்ள ஏ.டி.எஸ்., என்ற பயங்கரவாத தடுப்பு பிரிவுக்கு மாற்ற அதிகாரிகள் திட்டமிட்டுள்ளனர். அப்படி மாற்றப்பட்டால், தமிழக ஏ.டி.எஸ்., விசாரிக்கும் முதல் வழக்காக இது இருக்கும். இவ்வாறு அவர்கள் கூறினர்.