உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / விண்வெளி தொழில் பூங்கா பணிகள்; தமிழக அரசால் தொடரும் தாமதம்

விண்வெளி தொழில் பூங்கா பணிகள்; தமிழக அரசால் தொடரும் தாமதம்

சென்னை : துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், ராக்கெட் ஏவுதள கட்டுமானத்தை, மத்திய அரசின், 'இஸ்ரோ' துவக்கியுள்ளது. அதன் அருகே, விண் வெளி துறை நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்கும் விண்வெளி தொழில் உந்துசக்தி பூங்கா அமைக்கும் பணிகளை, 'டிட்கோ' நிறுவனம் இன்னும் துவக்காமல் உள்ளது. விண்வெளி துறையில், 'இஸ்ரோ' எனப்படும், இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனம் மட்டுமின்றி, தனியார் நிறுவனங்களும் ஈடுபட, மத்திய அரசு அனுமதி அளித்துஉள்ளது. இதனால், எடை குறைவான செயற்கைக் கோள்களை விண்ணில் ஏவ, துாத்துக்குடி மாவட்டம் குலசேகரன்பட்டினத்தில், 2,230 ஏக்கரில் சிறிய வகை ராக்கெட் ஏவுதளம் அமைக்கப்படுகிறது. இதற்கு, பிரதமர் நரேந்திர மோடி கடந்த ஆண்டு பிப்ரவரியில் அடிக்கல் நாட்டினார். அங்கு நிலத்தை மேம்படுத்தும் பணி நடந்து வந்த நிலையில், ராக்கெட் ஏவுதளம் உள்ளிட்ட கட்டுமான பணிகள் சில தினங்களுக்கு முன் துவங்கின. அங்கு, 2026 முதல் ராக்கெட் ஏவ திட்டமிடப்பட்டு உள்ளது.விண்வெளி துறை தொழில் நிறுவனங்களின் முதலீட்டை ஈர்க்க, குலசேகரன்பட்டனத்தில், 2,000 ஏக்கரில் விண்வெளி தொழில் மற்றும் உந்துசக்தி பூங்கா அமைக்க, 'டிட்கோ' எனப்படும், தமிழக தொழில் முன்னேற்ற நிறுவனம் முடிவு செய்துள்ளது. இந்த பூங்காவில் உள்ள மனைகள், ராக்கெட், செயற்கைக்கோள் தயாரிப்பு நிறுவனங்கள், அவற்றின் உதிரிபாகங்களை தயாரிக்கும் நிறுவனங்களுக்கு ஒதுக்கீடு செய்யப்பட உள்ளன. விண்வெளி தொழில் பூங்காவுக்கு நிலத்தை ஒதுக்க, துாத்துக்குடி மாவட்ட நிர்வாகம், 2024ல் அரசுக்கு ஒப்புதல் தெரிவித்தது. ஆனாலும், தொழில் பூங்கா அமைக்க நிலம் கையகப்படுத்தும் பணி கூட துவங்கப்படவில்லை. இதனால், பூங்காவை உருவாக்கும் பணியில் தாமதம் ஏற்படும் சூழல் உருவாகியுள்ளது.இதுகுறித்து, தொழில் துறை அதிகாரி ஒருவர் கூறியதாவது:உலக விண்வெளி சந்தையில், இந்தியாவின் பங்கு 2 சதவீதமாக உள்ளது. தற்போது, 72,000 கோடி ரூபாயாக உள்ள இந்திய விண்வெளி சந்தை மதிப்பை, 2033க்குள் 3.75 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதை, தனியார் துறை பங்கேற்பால் அடைய முடியும். விண்வெளி துறையில், 'ஸ்டார்ட் அப்' நிறுவனங்கள் அதிக எண்ணிக்கையில் தொழில் துவங்கி வருகின்றன. எனவே, அந்நிறுவனங்களின் முதலீட்டை தமிழகத்தில் ஈர்க்க, குலசேகரன்பட்டினத்தில் விண்வெளி தொழில் பூங்கா அமைக்கும் பணியை அரசு விரைந்து முடிக்க வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ