சேலம்: தமிழகத்தில், நகாய் கட்டுப்பாட்டில் உள்ள, 62 சுங்கச்சாவடிகளில், ஏப்., 1 முதல், 36 சுங்கச்சாவடியில் கட்டணம் உயர்த்தப்படும் என அறிவிக்கப்பட்ட நிலையில், லோக்சபா தேர்தலால், தாமதமாக நேற்று முதல் கட்டண உயர்வு அமலுக்கு வந்தது.அதன்படி, திண்டுக்கல் ஆத்துார், பரனுார், வாணியம்பாடி, கல்லக்குடி, வேலுார், விழுப்புரம் உட்பட, 36 சுங்கச்சாவடிகளில் 5 முதல் 20 ரூபாய் வரை கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. அத்துடன் மாதாந்திர கட்டணம், 100 முதல், 400 ரூபாய் வரை உயர்ந்துள்ளது. அதனால் சரக்கு வாகனங்களின் வாடகை அதிகமாகி, அத்தியாவசிய பொருட்களின் விலை மேலும் எகிறும் நிலை ஏற்பட்டுள்ளது.தமிழ்நாடு லாரி உரிமையாளர் சம்மேளன மாநில தலைவர் தன்ராஜ் கூறியதாவது:டீசல், உதிரி பாகங்கள் விலை ஏற்கனவே உயர்ந்துவிட்ட நிலையில், லோடு கிடைக்காதது போன்ற பல்வேறு காரணங்களால் லாரி தொழில் நசிந்து வருகிறது. இந்நிலையில், மீண்டும் சுங்க கட்டணத்தை உயர்த்தி இருப்பது, லாரி தொழிலை மேலும் முடக்கிவிடும். அதனால், சுங்க கட்டண உயர்வை கடுமையாக எதிர்க்கிறோம். அதை உடனடியாக திரும்ப பெற வேண்டும். தேர்தல் வாக்குறுதிப்படி சுங்கச்சாவடிகளை உடனடியாக அகற்றினால் மட்டும் தான், லாரி தொழில் மீண்டு வரும்.இவ்வாறு கூறினார்.