உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் நெடுஞ்சாலைத்துறை அறிமுகம்

நிலச்சரிவை தடுக்க மண் ஆணி திட்டம் நெடுஞ்சாலைத்துறை அறிமுகம்

சென்னை:மலைப்பகுதிகளில் மண் சரிவை தடுத்து மக்களை காக்க, 'மண் ஆணி திட்டம்' என்ற நவீன தொழில்நுட்பத்தை, தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது.நீலகிரி மாவட்டம் கடல் மட்டத்தில் இருந்து, 2,000 மீட்டர், அதாவது 6,600 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் நிலச்சரிவால் ஏற்படும் ஆபத்துகள் அதிகம். ஊட்டி - கோத்தகிரி - மேட்டுப்பாளையம் சாலையில், கோடப்மந்து அருகே நிலச்சரிவை தடுக்க, புதிய தொழில்நுட்பமான மண் ஆணி அமைத்து, நீர் விதைப்பு முறை, 'ஜியோ கிரிட்' முறையில், மண்ணின் உறுதித் தன்மையை அதிகப்படுத்தி வலிமையூட்டும் பணியை, நெடுஞ்சாலைத்துறை அறிமுகம் செய்துள்ளது. இப்பணியை நெடுஞ்சாலைத் துறை அமைச்சர் வேலு, நேற்று பார்வையிட்டார். உடன் அமைச்சர் ராமச்சந்திரன் இருந்தார்.

புதிய தொழில்நுட்பம்

மலையின் செங்குத்தான சரிவில் மண் அரிப்பை தடுத்து, நிலச்சரிவு ஏற்படாமல் இருக்க, புதிய தொழில்நுட்பம் பயன்படுத்தப்படுகிறது. மண் ஆணி அமைத்து, ஜியோ கிரிட் வழியாக மண்ணின் உறுதித்தன்மையை அதிகரித்து, 'ஹைட்ரோ சீடிங்' முறையில், புல் வளர்க்கப்படுகிறது. முதலில் மலையின் சாய்வு கோணம், 70 டிகிரிக்கு மிகாமல், தளர்வான மண்ணை அகற்றி மேற்பரப்பு சீராக்கப்படுகிறது. மண் ஆணி அமைத்தல் என்பது, செங்குத்தான மலைப் பகுதியில் மண் சரிவை தடுக்க, மண் மேற்பரப்பில் துளையிட்டு, வலுவூட்டப்பட்ட இரும்பு கம்பிகளை நிலை நிறுத்தும் நவீன தொழில்நுட்பமாகும்.'ஹைட்ரோ சீடிங்' என்பது புல் விதை, தழை கூளம், உரம் ஆகியவற்றை நீரில் கலந்து உருவாக்கும் விதைக் கலவையை, உயர் அழுத்த குழாய் வழியாக, செங்குத்தான மலைப் பகுதிகளில் தெளிப்பதாகும். தழை கூளம், நறுக்கப்பட்ட மரப்பட்டை, வைக்கோல் போன்ற பொருட்களால் ஆனதால், நீரை உறிஞ்சி தேக்கி வைக்கும். எனவே, ஈரம் காயாமல் புற்களின் வளர்ச்சியை உறுதி செய்கிறது.

ஜியோ கிரிட்

பொதுவாக மண் சரிவை தடுக்க, கான்கிரிட் தாங்கு சுவர்கள் கட்டப்படும். இதனால், தாவரங்கள் வளராத சூழ்நிலை ஏற்படுகிறது. இதற்கு மாற்றாக, 'ஜியோ கிரிட்' எனப்படும், பாலிமர் பொருள்களால் செய்யப்பட்ட அல்லது பின்னப்பட்ட முப்பரிமாண இரும்பு கம்பிகள் வழியாக, வலுவூட்டப்பட்ட பாய்கள் பயன்படுத்தப்படுகின்றன.இப்பாய்கள், புல் விதைகள் விதைக்கப்பட்ட மேல் பகுதியில் பரப்பப்பட்டு, மண் ஆணிகளுடன் இணைக்கப்படுகின்றன. இது மண் சரிவை தடுக்கிறது. இப்பணிகள் வால்பாறை, கொல்லிமலை, ஏற்காடு மலை ஆகிய இடங்களிலும் நடந்து வருகின்றன என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்