சென்னை:தோட்டக்கலை பண்ணைகளில். விவசாயிகள் எதிர்பார்க்கும் காய்கறிகள் நாற்று செடிகள் இல்லாததால், சாகுபடியை அதிகரிப்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது.மாநிலம் முழுதும், 39.5 லட்சம் ஏக்கரில் தோட்டக்கலை பயிர் சாகுபடி நடந்து வருகிறது. இதில், காய்கறிகள் மட்டும், 8.89 லட்சம் ஏக்கரில் சாகுபடி செய்யப்படுகின்றன. இதன் வாயிலாக, ஆண்டுக்கு 91.9 லட்சம் டன் காய்கறிகள் உற்பத்தியாகின்றன. திருவள்ளூர், கிருஷ்ணகிரி, தருமபுரி, சேலம், திண்டுக்கல், நீலகிரி, திருப்பூர், ராணிப்பேட்டை, பெரம்பலுார், திருச்சி, துாத்துக்குடி உள்ளிட்ட மாவட்டங்களில் காய்கறிகள் சாகுபடி அதிகளவில் நடக்கின்றன. பெரும்பாலும், தக்காளி, வெண்டை, கத்தரிக்காய், பச்சை மிளகாய், புடலங்காய், முள்ளங்கி, அவரைக்காய் உள்ளிட்ட காய்கறிகள் அதிகளவில் சாகுபடி செய்யப்படுகின்றன. ஆனால், உற்பத்தியை விட தேவை இரண்டு மடங்கிற்கு மேல் உள்ளது. எனவே, சாகுபடி பரப்பை அதிகரிக்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டு உள்ளது. பல திட்டங்களை செயல்படுத்த, கோடிக்கணக்கான ரூபாய் மானியம் வழங்கியும், கடந்தாண்டு தோட்டக் கலை பயிர்கள் சாகுபடி பரப்பு, 3.32 சதவீதம் மட்டுமே உயர்ந்துள்ளது.நடப்பாண்டு, ஆடி பட்டம் துவங்கியுள்ளது. தென்மேற்கு பருவ மழையை பயன்படுத்தி, இப்பருவத்தில் காய்கறிகள் சாகுபடியில் விவசாயிகள் ஈடுபடுவது வழக்கம். இதற்காக, 37 மாவட்டங்களில் உள்ள 73 அரசு தோட்டக்கலை பண்ணைகளில், காய்கறி நடவுச் செடிகள், விதைகள் ஆகியவை குறைந்த விலையில் வழங்கப்படும். நடப்பாண்டு தோட்டக்கலை பண்ணைகளில் காய்கறி நடவுச்செடிகளுக்கு தட்டுப்பாடு உள்ளது. விவசாயிகள் விரும்பாத பலவகை நடவுச்செடிகள் ஒப்புக்கு தயாரித்து வைக்கப்பட்டு உள்ளதாக கூறப்படுகிறது. பல மாவட்டங்களில் உற்பத்தி குறைந்து, காய்கறிகள் விலை இரண்டு மடங்கு உயர்ந்துள்ளது. குடும்ப செலவை கட்டுப்படுத்த முடியாமல் பலரும் திணறி வருகின்றனர். ஆடிப்பட்டத்தில் காய்கறிகள் உற்பத்தி அதிகரித்தால் மட்டுமே, அவற்றின் விலை கட்டுக்குள் வரும். ஆனால், உற்பத்தியை பெருக்குவதற்கான முயற்சிகளை, தோட்டக்கலைத் துறை இன்னும் துவங்காததால், விவசாயிகள் வாட்டத்தில் உள்ளனர்.- ஆஞ்சநேயலுதிருவள்ளூர் மாவட்ட தலைவர், அனைத்து விவசாயிகள் சங்க ஒருங்கிணைப்பு குழு
போதிய செடிகள் இல்லை
சென்னையில் காய்கறிகள் தேவை அதிகம். எனவே, அண்டை மாவட்டங்களில், காய்கறிகள் சாகுபடியை அதிகரிக்க வேண்டும். முன்பு மாதவரம் தோட்டக்கலை பண்ணையில் இருந்து விவசாயிகளுக்கு விதைகள், நடவு செடிகள் வழங்கப்படும். தற்போது, திருவள்ளூர் அருகே ஈக்காடு கண்டிகையில் தோட்டக்கலை பண்ணை துவங்கப்பட்டுள்ளது. இங்கு போதிய நடவுச் செடிகள் இல்லை. பல மாவட்டங்களிலும் இதேபோன்ற பிரச்னை உள்ளது. குறித்த காலத்தில் விதைகள், நடவு செடிகளை வழங்க அரசு நடவடிக்கை எடுக்க  வேண்டும்.