| ADDED : மே 28, 2024 01:15 AM
விருதுநகர் : தமிழகத்தில் புதியதாக துவங்கப்பட்ட அரசு மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளில் தொழில் நுட்ப பணியாளர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால் ஒப்பந்த ஊழியர்களை வைத்து பணிகள் நடக்கிறது.தமிழகத்தில் திண்டுக்கல், ராமநாதபுரம், விருதுநகர் உள்ளிட்ட 11 மாவட்டங்களில் புதிய மருத்துவக்கல்லுாரி 2022 ஜன. 12 ல் துவங்கப்பட்டன. இவற்றில் லிப்ட் ஆப்ரேட்டர், எலக்ட்ரீசியன், பிளம்பர், நீரிழிவு சிகிச்சை பிரிவு, அறுவை சிகிச்சை அரங்க டெக்னிஷியன்கள், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலைய ஆப்ரேட்டர், தகவல் தொழில்நுட்ப ஒருங்கிணைப்பாளர் ஆகிய பணியிடங்கள் நிரப்பப்படவில்லை.சிகிச்சைக்கு நவீன மிஷின்கள், உபகரணங்கள் வழங்கப்பட்டுள்ளது. ஆனால் இவற்றை இயக்க பணியாளர்கள் நியமிக்கப்படவில்லை. ஒப்பந்த பணியாளர்கள் மூலம் மருத்துவமனை நிர்வாகங்கள் இயக்குகின்றன. மேலும் எலக்ட்ரீசியன், பிளம்பர் ஒப்பந்த பணியாளர்கள் யாரும் நீடித்து இருப்பதில்லை. இதனால் தேவையான சமயத்தில் ஆட்கள் இல்லாமல் பணிகள் பாதிக்கப்படுகிறது.மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனை ஆய்வகங்களின் கழிவு நீர் சுத்திகரிப்பு செய்து வெளியேறுவதை கண்காணிக்க ஆப்ரேட்டர் இல்லை. மற்ற மருத்துவக்கல்லுாரிகளில் பணிபுரியும் ஐ.டி., ஒருங்கிணைப்பாளர்கள் கூடுதல் பணியாக புதிய மருத்துவக்கல்லுாரிகளின் பணிகளையும் செய்து வருகின்றனர். எனவே புதிய மருத்துவக்கல்லுாரி, மருத்துவமனைகளுக்கு தேவையான தொழில்நுட்ப பணியாளர்கள் பணியிடங்களை உடனடியாக நிரப்ப வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.