சென்னை:“தமிழ் வளர்ச்சி துறை சார்பில், 30,000 ரூபாயாக வழங்கப்பட்டு வந்த சிறந்த நுால் பரிசுத்தொகை, இனி, 50,000 ரூபாயாக உயர்த்தப்படும்,” என, தமிழ் வளர்ச்சி துறை அமைச்சர் சாமிநாதன் பேசினார்.தமிழ் வளர்ச்சி துறை சார்பில், ஒவ்வொரு ஆண்டும், 33 தலைப்புகளில் வெளியாகும் சிறந்த நுால்கள் தேர்வு செய்யப்பட்டு, நுாலாசிரியர் மற்றும் பதிப்பாளருக்கு பணப்பரிசு மற்றும் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படுகிறது. அந்த வகையில், 2022ல் வெளியான நுால்களுக்கான பரிசுகளை, அமைச்சர் சாமிநாதன் நேற்று வழங்கினார்.அதில், மரபுக்கவிதை பிரிவில், கரு.நாகராசன் எழுதிய, ராமானுச மாமுனிவர் காவியம், மொழிபெயர்ப்பு பிரிவில், ஆயிஷா நடராசன் எழுதிய மாண்டிசோரி எனும் மழலையர் கல்வி, வரலாற்று பிரிவில் சுபாஷினி எழுதிய ராஜராஜனின் கொடை.சட்டவியல் பிரிவில் சந்திரிகா சுப்பிரமணியன் எழுதிய ஊடக சட்டங்கள் உள்ளிட்ட, 33 பிரிவு நுால்களுக்கு தலா 30,000 ரூபாய் பரிசுத் தொகையும், அவற்றை பதிப்பித்த பதிப்பகத்தாருக்கு 10,000 ரூபாய் பரிசுத்தொகையும் வழங்கப்பட்டன. பின், அமைச்சர் சாமிநாதன் பேசியதாவது:தேசிய அளவில் நுண்கலை கல்லுாரிகளின் தரவரிசையில், திருவையாறு இசைக்கல்லுாரி முதல் இடம் பிடித்துள்ளது. மாமல்லபுரம் சிற்பக்கலை கல்லுாரி 11வது இடம் பிடித்துள்ளது. பல்கலைகளில், அடையாறு இசை, நுண்கலை பல்கலை 12வது இடம் பிடித்துள்ளது.இனி, சிறந்த நுால் பரிசாக, 50,000 ரூபாயும், பதிப்பகத்துக்கு 25,000 ரூபாயும் வழங்கப்படும்.இவ்வாறு அவர் பேசினார்.தமிழ் வளர்ச்சி துறை செயலர் சுப்பிரமணியன், இயக்குனர் அருள், இசை பல்கலை துணை வேந்தர் சவுமியா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.