முதலில் மின் கட்டண பாக்கியை வசூலியுங்கள் அதிகாரிகளுக்கு தொழிற்சங்கங்கள் அட்வைஸ்
சென்னை: 'உள்ளாட்சி அமைப்புகள் நிலுவை வைத்துள்ள 3,300 கோடி ரூபாய் மின் கட்டணத்தை விரைந்து வசூலிக்க, நடவடிக்கை எடுக்க வேண்டும்' என, மின் வாரிய தலைவர் ராதாகிருஷ்ணனிடம், தொழிற்சங்கத்தினர் வலியுறுத்தி உள்ளனர். தமிழக மின் வாரியத்தில் காலி பணியிடங்களை நிரப்புவது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் தொடர்பாக, தொழிற்சங்கங்களின் நிர்வாகிகள் உடன், ராதாகிருஷ்ணன் நேற்று சென்னையில் பேச்சு நடத்தினார். பேச்சு குறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொது செயலர் சுப்ரமணியன் கூறியதாவது:மின் பயன்பாடு கணக்கெடுத்த தேதியில் இருந்து, குறித்த காலத்திற்குள் மின் கட்டணம் செலுத்த வேண்டும். இல்லை எனில், அரசு மின் இணைப்பாக இருந்தாலும், மின் வினியோகத்தை துண்டிக்க வேண்டும். ஆனால், மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சியை உள்ளடக்கிய உள்ளாட்சி அமைப்புகள், குறித்த காலத்தில் மின் கட்டணம் செலுத்தாமல், 3,300 கோடி ரூபாய் நிலுவை வைத்துள்ளன. இருப்பினும், மின்சாரம் தொடர்ந்து வழங்கப்படுகிறது. ஏற்கனவே, வாரியம் நிதி நெருக்கடியில் உள்ள நிலையில், உள்ளாட்சிகள் கட்டணம் செலுத்தாதது, மேலும் சுமையை ஏற்படுத்துகிறது. எனவே, உள்ளாட்சி அமைப்புகளிடம் இருந்து, மின் கட்டணத்தை விரைந்து வசூலிக்க, வாரியத் தலைவர் ராதாகிருஷ்ணனிடம் வலியுறுத்தப்பட்டது. அவை, கட்டணத்தை செலுத்த தாமதம் செய்தால், உள்ளாட்சி அமைப்புகளுக்கு, மின் வாரியம் செலுத்த வேண்டிய வரி இருந்தால், நிலுவை கட்டணத்தில் அதை சரி செய்து, பாக்கியை விரைவாக வசூலிக்க வேண்டும் என தெரிவித்தோம். இது தொடர்பான விபரங்களை அதிகாரிகளிடம் கேட்டு, உரிய நடவடிக்கை எடுப்பதாக, மின் வாரிய தலைவர் உறுதி அளித்தார். காலி பணியிடங்களை நிரப்ப நடவடிக்கை எடுப்பதாகவும், கடந்த 2023 முதல் வழங்க வேண்டிய புதிய ஊதியம் தொடர்பாக பேச்சு நடத்த, விரைவில் குழு அமைப்பதாகவும் தெரிவித்தார். இவ்வாறு அவர் கூறினார்.