உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / பெற்றோரிடம் உள்ள பிரச்னை அறியாத அக்கா-, தங்கை ஐகோர்ட்டில் முத்த மழை

பெற்றோரிடம் உள்ள பிரச்னை அறியாத அக்கா-, தங்கை ஐகோர்ட்டில் முத்த மழை

சென்னை:தாய், தந்தை இடையே குடும்ப பிரச்னை என்பதை கூட உணர முடியாத சிறுமிகளான அக்கா-, தங்கை இருவரும், வாஞ்சையுடன் கைகளை பற்றியவாறே, நீதிமன்றத்துக்குள் முத்த மழை பொழிந்தது நிகழ்வு, அனைவரையும் உற்று நோக்க வைத்தது. சென்னையை சேர்ந்த தம்பதியினருக்கு, 6 வயது, 3 வயது என இரண்டு பெண் குழந்தைகள் உள்ளன. தம்பதியர் இடையே குடும்ப பிரச்னை உள்ளதால், 6 வயது குழந்தை தந்தையிடமும், 3 வயது குழந்தை தாயிடமும் உள்ளது. கணவரிடம் உள்ள குழந்தையை மீட்டு, தன்னிடம் ஒப்படைக்க கோரி, சென்னை உயர் நீதிமன்றத்தில் தாய் வழக்கு தொடர்ந்தார்.இந்த வழக்கு, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்ரமணியம், வி.சிவஞானம் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. அப்போது, தந்தையுடன், 6 வயது குழந்தையும், தாயுடன் 3 வயது குழந்தையும் ஆஜராகினர்.தந்தையுடன் வந்த குழந்தையை அருகில் அழைத்த நீதிபதிகள், 6 வயது சிறுமியிடம், 'உன் தோழிகள் யாரு? உனக்கு யாரை பிடிக்கும்?' என்பன போன்ற கேள்விகளை கேட்டனர். அதற்கு நீதிபதிகளிடம், மழலை மாறாத மொழியில் சிறுமி பதிலளித்தாள்.பின், 'மனைவி என்னை அவமதித்தது குறித்த 'சிசிடிவி' காட்சிகள் உள்ளன' என்று தந்தை தரப்பிலும்; 'அவ்வவ்போது கணவர் கெட்ட வார்த்தைகளால், என்னை திட்டுகிறார்' என, மனைவி தரப்பிலும் தெரிவிக்கப்பட்டது.இதையடுத்து நீதிபதிகள், 'சிசிடிவியுடன் குடும்பம் நடத்த முடியாது; ஒருவரை ஒருவர் மாறி, மாறி குற்றம்சாட்டுவது சரியல்ல; குழந்தையை பார்த்தால், அவரது தந்தையை நன்றாகத் தான் கவனித்துக் கொள்வது போல் தெரிகிறது. குழந்தையிடம் பேசியதில், தாய், தந்தை இருவரையும் பிடிக்கும் என்று தான் கூறினாள். எனவே, குழந்தைகள் எதிர்காலத்தை கருத்தில் கொண்டு, இருவரும் ஒன்றாக வாழ வேண்டும்' என்று அறிவுரை வழங்கினர்.ஆனால், தாய் தரப்பில், கணவருடன் ஒன்றாக போக மறுப்பு தெரிவிக்கப்பட்டது. இதையடுத்து, இருவரும் குழந்தைகளுடன் ஒன்றாக அமர்ந்து பேசிவிட்டு, மாலை வரும்படி நீதிபதிகள் தெரிவித்தனர். அதன்படி, தாய், தந்தை இருவரும் மாலையில் நீதிபதிகள் முன் ஆஜராகினர்.அப்போதும், தம்பதியர் இடையே சுமூக உடன்பாடு ஏற்படாததை அறிந்த நீதிபதிகள், 'சட்ட விரோதமாக குழந்தையை அவரது தந்தை வைத்துள்ளார் எனக் கூறமுடியாது. சிறுமியை அழைத்து நேரில் பேசியதில், தாய், தந்தை இருவரையும் பிடிக்கும் என, தெரிவித்துள்ளார். விருப்பத்தை ஆராய்ந்து தெரிவிக்கும் அளவுக்கு சிறுமி பக்குவப்படவில்லை' எனக்கூறி, தாய் தொடர்ந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர்.இதையடுத்து, தன் குழந்தையை அனுப்பி வைக்கும்படி, இரு கைகளை கூப்பியவாறு, நீதிபதிகளிடம் தாய் கண்ணீருடன் கேட்டார். 'அதுபோல உத்தரவை, இந்த நீதிமன்றம் பிறப்பிக்க முடியாது; குழந்தையை தன் வசம் கொண்டு வருதல், பார்வையிடும் உரிமை கோரல் போன்றவை தொடர்பாக, குடும்ப நல நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்து, உரிய நிவாரணத்தை மனுதாரர் கோரலாம்' என, நீதிபதிகள் அறிவுறுத்தினர்.வழக்கு விசாரணையின்போது, அக்கா, -தங்கையான சிறுமியர் இருவரும் மாறி மாறி முத்த மழை பொழிந்ததோடு, வாஞ்சையுடன் கைகளை பற்றியவாறு, தாய், தந்தையுடன் பேசியது, நீதிமன்றத்தில் இருந்த அனைவரின் கவனத்தையும் ஈர்த்தது.நீதிமன்றத்துக்கு வெளியே கண்ணீருடன் நின்றிருந்த தாயிடம் இருந்த, 3 வயது சிறுமி, தன் தந்தை, அக்காவை அழைத்து, அவர்களுடன் நீதிமன்ற வளாகம் வரை கொஞ்சியபடி நடந்து சென்றது அனைவரின் நெஞ்சை உருக்குவதாக அமைந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

முக்கிய வீடியோ