கோதுமை ஒதுக்கீடு 8,500 டன்னாக குறைப்பு
சென்னை:தமிழக ரேஷன் கடைகளில், அரிசி கார்டுதாரர்களுக்கு, கோதுமை இலவசமாக வழங்கப்படுகிறது. அவர்கள், தங்களுக்கு உரிய அரிசி ஒதுக்கீட்டில், குறிப்பிட்ட அளவு அரிசிக்கு பதில், கோதுமையை வாங்கிக் கொள்ளலாம். அதன்படி, தலா ஒருவருக்கு, 5 கிலோ முதல், 10 கிலோ வரை கோதுமை வழங்கப்பட்டது. இந்த கோதுமையை, மத்திய அரசு வழங்குகிறது. மத்திய அரசு சார்பில், மாதம் சராசரியாக, 13,500 டன் கோதுமை வழங்கப்பட்டது. இதை 2023ல் மாதம், 8,500 டன்னாக குறைத்தது. தமிழக அரசின் தொடர் கோரிக்கையை அடுத்து, 2024 அக்., முதல் கோதுமை ஒதுக்கீட்டை மாதம், 17,100 டன்னாக மத்திய அரசு உயர்த்தியது. இந்நிலையில், இம்மாதத்தில் இருந்து, கோதுமை ஒதுக்கீடு, 8,576 டன்னாக குறைக்கப்பட்டுள்ளது. எனவே, உணவு வழங்கல் துறை ஆணையர் அலுவலகத்தில் இருந்து தெரிவிக்கப்படும் அளவுக்கு, கோதுமை வழங்க வேண்டும் என, ரேஷன் ஊழியர்கள் அறிவுறுத்தப்பட்டு உள்ளனர். பல கடைகளில் வழக்கமான அளவில், கோதுமை வினியோகம் செய்யப்படாததால், ரேஷன் கார்டுதாரர்கள், கடை ஊழியர்களுடன் தகராறில் ஈடுபட்டு வருகின்றனர்.