சென்னை, :மழைக் காலங்களில், வீணாகக் கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் திட்டம் குறித்து, விரிவான அறிக்கை அளிக்க, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.பருவமழைக் காலங்களில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் விதமாக, சென்னையில் உள்ள ஏரிகளை சீரமைக்கக்கோரி, உயர் நீதிமன்றத்தில், வழக்கறிஞர் ஜெகநாத் மனு தாக்கல் செய்திருந்தார். இம்மனு, பொறுப்பு தலைமை நீதிபதி டி.கிருஷ்ணகுமார், நீதிபதி குமரேஷ்பாபு அடங்கிய, 'முதல் பெஞ்ச்' முன், நேற்று விசாரணைக்கு வந்தது.அப்போது, 'சென்னை மட்டுமின்றி, தமிழகம் முழுதும் மழைக்காலங்களில் வீணாகும் நீரை, அருகில் உள்ள ஏரிகளுக்கு ஏன் திருப்பி விடக்கூடாது' என, முதல் பெஞ்ச் கேள்வி எழுப்பியது. உபரி நீரை பாதுகாக்க, அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்தது.அரசு தரப்பில் ஆஜரான அரசு பிளீடர் எட்வின் பிரபாகர், ''நீர்வள ஆதாரத்துக்கு என தனித்துறை ஏற்படுத்தப்பட்டு உள்ளது; உபரி நீரை பாதுகாக்க, பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளன. இதுகுறித்து, அறிக்கை தாக்கல் செய்கிறேன்,'' என்றார்.இதையடுத்து, ஏரி, குளங்களுக்கு, மழைநீரை திருப்பி விடுவதன் வாயிலாக, நிலத்தடி நீர் மட்டம் உயரும் எனவும், நீர்வள ஆதாரத்துறை ஏற்படுத்தப்பட்ட பின் மேற்கொள்ளப்பட்ட திட்டங்கள் குறித்தும், மழைக் காலத்தில் வீணாகக் கடலில் கலக்கும் நீரை பாதுகாக்கும் திட்டம் குறித்தும், உபரிநீர் வீணாகாத வகையில் உறுதி செய்யவும், விரிவான அறிக்கை தாக்கல் செய்யும்படி, அரசுக்கு, முதல் பெஞ்ச் உத்தரவிட்டது. விசாரணையை இரண்டு வாரங்களுக்கு தள்ளி வைத்தது.