சென்னை:கோமா நிலையில் இருக்கும் கணவரின் சொத்தை விற்க, மனைவிக்கு அனுமதி அளித்து, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.சென்னையை சேர்ந்தவர் சசிகலா; இவரது கணவர் சிவகுமார்; உடல்நலம் பாதிக்கப்பட்டு கோமா நிலையில் உள்ளார். கடந்த பிப்ரவரி 13 முதல் ஏப்ரல் 4 வரை, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். அதற்காக, பல லட்சம் ரூபாய் செலவாகியது. தற்போது, கணவரை வீட்டில் வைத்து கவனித்துக் கொள்கிறார். செவிலியர், உதவியாளர்களும் உள்ளனர். நிராகரிப்பு
இந்நிலையில், கணவருக்கும், அவரது பெயரில் உள்ள சொத்துக்களுக்கும் பாதுகாவலராக தன்னை நியமிக்கக்கோரி, சசிகலா வழக்கு தொடர்ந்தார். மனுவை நிராகரித்த உயர் நீதிமன்ற தனி நீதிபதி, சிவில் நீதிமன்றத்தை அணுகும்படி உத்தரவிட்டார். இதை எதிர்த்து, உயர் நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். மனு, நீதிபதிகள் ஜி.ஆர்.சுவாமிநாதன், பி.பி.பாலாஜி அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. மனுதாரர் சார்பில், வழக்கறிஞர் என்.விஜயராஜ் ஆஜரானார். சிவகுமார் - சசிகலா தம்பதியரின் குழந்தைகளை வழக்கில் சேர்க்க, நீதிபதிகள் உத்தரவிட்டனர். இருவரும் சேர்க்கப்பட்டு, நீதிபதிகள் முன் ஆஜராகினர். இந்த வழக்கில் தாய் கோரிய நிவாரணத்தை வழங்குவதில், தங்களுக்கு எந்த ஆட்சேபனையும் இல்லை என, அவர்கள் தெரிவித்தனர். தங்களுக்கு எந்த வழியும் இல்லை என்றும், சொத்துக்களை விற்க தாயை அனுமதிக்கவில்லை என்றால் குடும்பமே பாதிக்கப்படும் என்றும் கூறினர். இருவரிடமும் விசாரித்த பின், நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:வழக்கு விசாரணைக்கு ஏற்புடையதல்ல என்ற, தனி நீதிபதியின் உத்தரவு சரியல்ல. கோமா நிலையில் இருந்த ஒருவரது மனைவியின் வழக்கை விசாரித்த கேரள உயர் நீதிமன்றம், மனைவியை பாதுகாவலராக நியமித்து, 2019ல் உத்தரவிட்டது. அதேபோன்ற உத்தரவை, உயர் நீதிமன்ற மதுரை கிளையும், 2022, 2023, 2024ல் பிறப்பித்துள்ளது.இந்த வழக்கை பொறுத்தவரை, கோமா நிலையில் சிவகுமார் உள்ளார். குழந்தைகள் இருவரிடமும் விசாரித்த பின், குடும்பத்துக்கு வேறு வருவாய் இல்லை என்பதையும், சொத்துக்களை விற்க அனுமதிக்கவில்லை என்றால், அவர்களுக்கு பெருத்த கஷ்டம் ஏற்படும் என்பதையும் அறிந்தோம். கோமா நிலையில் இருக்கும் ஒருவரை கவனிப்பது என்பது, அவ்வளவு எளிதானது அல்ல. அதற்கு, நிதி தேவை. மருத்துவ உதவியாளர்களை வாடகைக்கு அமர்த்த வேண்டும். சொத்துக்கள், சிவகுமாருக்கு சொந்தமானவை; அவரது நலனுக்காக பயன்படுத்த வேண்டிய அவசியம் உள்ளது. முழு பொறுப்பையும் மனைவி தான் சுமக்க வேண்டியதுள்ளது. அவரை சிவில் நீதிமன்றத்துக்கு போக சொல்வது, முறையல்ல. இதேபோன்ற வழக்குகள் விசாரணைக்கு ஏற்கப்பட்டு, நிவாரணங்கள் வழங்கப்பட்டு உள்ளன. எனவே, தனி நீதிபதியின் உத்தரவு ரத்து செய்யப்படுகிறது. மதிப்பு தெரியவில்லை
கணவருக்கும், அவரது சொத்துக்களுக்கும் பாதுகாவலராக மனுதாரர் நியமிக்கப்படுகிறார். சிவகுமார் பெயரில் சென்னை, வால்டாக்ஸ் சாலையில் உள்ள அசையா சொத்தை விற்க, மனைவிக்கு அனுமதி அளிக்கப்படுகிறது. சொத்தின் மதிப்பு உறுதியாக தெரியவில்லை என்றாலும், கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும். சிவகுமார் பெயரில், 50 லட்சம் ரூபாயை வங்கியில் டிபாசிட் செய்ய வேண்டும். அதிலிருந்து கிடைக்கும் வட்டியை, மூன்று மாதங்களுக்கு ஒரு முறை எடுத்துக் கொள்ள வேண்டும்.இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.