| ADDED : மே 16, 2024 01:53 AM
சென்னை:சாலை விபத்தில் மூளைச்சாவு அடைந்த இளைஞரின் உடல் உறுப்புகள் தானத்தால், ஆறு பேருக்கு மறுவாழ்வு கிடைத்துள்ளது.கடலுார் மாவட்டம், ஸ்ரீமுஷ்ணத்தை சேர்ந்தவர் கருணாகரன், 30. செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றத்தில், தனியார் நிறுவனத்தில் பணியாற்றி வந்தார். கடந்த 11ம் தேதி சாலை விபத்தில் பலத்த காயமடைந்த அவர், சென்னை போரூரில் உள்ள ஸ்ரீராமச்சந்திரா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.அவருக்கு மூளையில் ரத்தக்கசிவு இருந்ததால், டாக்டர்கள் தீவிர சிகிச்சை அளித்து வந்த நிலையில், மூளைச்சாவு அடைந்தார். அவருக்கு, 11 மாதங்களுக்கு முன் தான் திருமணம் நடந்தது. அவரது மனைவி மலர்விழி நான்கு மாத கர்ப்பிணியாக உள்ளார்.இந்நிலையில், கருணாகரின் உடல் உறுப்புகளை தானமளிக்க உறவினர்கள் முன்வந்தனர். சிறுநீரகங்கள், கண்கள், கல்லீரல், இதய வால்வுகள் தானமாக பெறப்பட்டன.அதில், ராமச்சந்திரா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும், 53 வயது நபருக்கு கல்லீரலும், 36 வயது நபருக்கு சிறுநீரகமும் உறுப்பு மாற்று அறுவை சிகிச்சையில் பொருத்தப்பட்டன. கண்கள் தேவையானவர்களுக்கு பொருத்துவதற்காக, மருத்துவமனையின் கண் வங்கியில் வைக்கப்பட்டுள்ளன. மற்றொரு சிறுநீரகம், இதய வால்வுகள் மற்ற மருத்துவமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளன. இதன் வாயிலாக, ஆறு பேருக்கு மறு வாழ்வு கிடைக்கிறது.