உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஜாபர் சாதிக்கின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்

ஜாபர் சாதிக்கின் ரூ.56 கோடி சொத்துக்கள் முடக்கம்

சென்னை:ஜாபர் சாதிக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்களுக்கு சொந்தமான, சொகுசு பங்களா, கார்கள் மற்றும் ஹோட்டல் என, 55.30 கோடி ரூபாய் மதிப்புள்ள சொத்துக்களை அமலாக்கத்துறை அதிகாரிகள் முடக்கி உள்ளனர்.தி.மு.க.,வின், சென்னை மேற்கு மாவட்ட அயலக அணி துணை அமைப்பாளராக இருந்தவர் ஜாபர் சாதிக், 36. வெளிநாடுகளுக்கு போதைப் பொருள் கடத்தி, 2,000 கோடி ரூபாய் வரை சம்பாதித்துள்ளார். அவரை டில்லியில், மார்ச் 9ல், மத்திய போதைப் பொருள் கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரிகள் கைது செய்தனர். அவர், தன் சகோதரர்கள், மனைவி மற்றும் பினாமிகள் பெயரில், சட்டவிரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, அமலாக்கத்துறை அதிகாரிகளும் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர். இதில், ஜாபர் சாதிக் மற்றும் அவரது சகோதரரும், வி.சி., நிர்வாகியாக இருந்த முகமது சலீம், 34, ஆகியோரை கைது செய்து சென்னை புழல் சிறையில் அடைத்துள்ளனர். அத்துடன், சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டது தொடர்பாக, ஜாபர் சாதிக் மற்றும் அவரது குடும்ப உறுப்பினர்கள், பினாமிகள் பெயரில் உள்ள, 55.30 கோடி ரூபாய் மதிப்புள்ள, அசையும் மற்றும் அசையா சொத்துக்களை நேற்று முடக்கி உள்ளனர்.இதுகுறித்து, அமலாக்கத்துறை நேற்று வெளியிட்ட செய்திக்குறிப்பு:ஜாபர் சாதிக், அவரது மனைவி அமீனா பானு, சகோதரர்கள் முகமது சலீம், மைதீன் கனி, பினாமிகள் முகமது முஸ்தபா, ஜாமல் முகமது ஆகியோர் சட்ட விரோத பண பரிமாற்றத்தில் ஈடுபட்டுள்ளனர்.தி.மு.க., நிர்வாகியாக இருந்த ஜாபர் சாதிக், சினிமா பட தயாரிப்பாளர், ரியல் எஸ்டேட் அதிபர், ஹோட்டல் அதிபர் என வலம் வந்துள்ளார். ஆனால், தன் சகோதரர்கள் மற்றும் கூட்டாளிகளுடன் சேர்ந்து, மிகப்பெரிய அளவில் போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டுள்ளார். அந்த கும்பலின் தலைவனாகவும் செயல்பட்டுள்ளார்.அவர் சட்ட விரோதமாக சம்பாதித்த பணத்தில், ஜே.எஸ்.எம்., ரெசிடென்சி ஹோட்டல், சொகுசு பங்களா மற்றும் ஜாகுவார், மெர்சிடிஸ் உட்பட ஏழு கார்களை வாங்கி உள்ளார். ஜாபர் சாதிக் மற்றும் குடும்ப உறுப்பினர்கள் பெயரில் வாங்கப்பட்டுள்ள இந்த சொத்துக்களை முடக்கி உள்ளோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sankaranarayanan
செப் 06, 2024 18:37

ஜாபர் சாதிக்கின் சொத்துக்களை முடக்கம் செய்வதுடன் நிற்காமல் அவரால் கட்சியில் எவ்வளவு பேர்கள் பயனடைந்துள்ளார்கள் எத்தனை பேர்கள் எவ்வளவு சொத்துக்கள் சேர்த்திருக்கிறார்கள் என்று கணக்கெடுத்தால் அது இதை விட பன்மடங்கு அதிகமாகவே வரும் சீக்கிறமே அதை முதலில் செய்யுங்கள்


முக்கிய வீடியோ