UPDATED : ஜூன் 13, 2025 02:37 PM | ADDED : ஜூன் 13, 2025 02:30 PM
சென்னை: ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்ள இருப்பதாக, பா.ம.க., செயல் தலைவர் அன்புமணி அறிவித்துள்ளார்.அவரது அறிக்கை: தமிழக மக்களுக்கு நல்லாட்சி வழங்குவதை விட, நல்லாட்சி வழங்குவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துவதில் தான் தமிழக அரசு தீவிரம் காட்டி வருகிறது. தமிழக மக்கள் அனைவருக்கும் அனைத்து உரிமைகளும் வழங்கப்படுவதாகவும், அவர்கள் மிகவும் மகிழ்ச்சியாக இருப்பது போன்றும் ஒரு மாயத் தோற்றத்தை ஏற்படுத்தும் முயற்சிகளில் தான் தமிழக அரசு ஈடுபட்டிருக்கிறது. தமிழக அரசு ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்துவதற்கான அதன் கடமையை தட்டிக்கழித்துக் கொண்டிருக்கிறது. உச்சநீதிமன்ற வழக்கால் ஆபத்துக்குள்ளாகியிருக்கும் 69 சதவீத இட ஒதுக்கீட்டை பாதுகாப்பது, பல்வேறு சமூகங்களுக்கு அவர்களின் மக்கள் தொகை மற்றும் சமூக பின்தங்கிய நிலை அடிப்படையில் உள் இட ஒதுக்கீடு வழங்குவது உள்ளிட்ட சமூகநீதிக் கடமைகளை குழி தோண்டி புதைக்கிறது திராவிட மாடல் அரசு.பெண்களுக்கு எதிரான பிற வன்முறைகளும் தலைவிரித்து ஆடுகின்றன. கல்வி சேவையாக இருந்த நிலை மாறி கொள்ளையாக மாறி விட்டது. மது, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள்களின் நடமாட்டம் தான் அனைத்து வகையான சமூகக் கேடுகளுக்கும் காரணமாக இருக்கிறது என்று தெரிந்தும் கூட அவற்றைக் கட்டுப்படுத்த எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. ஜூலை 25ம் தேதி முதல் 100 நாட்களுக்கு தமிழக மக்கள் உரிமை மீட்பு பயணம் மேற்கொள்கிறோம். இந்த பயணம் செங்கல்பட்டு மாவட்டம் திருப்போரூரில் தொடங்கவுள்ளது.தமிழக மக்கள் உரிமை மீட்புப் பயணம் ஓர் அரசியல் கட்சிக்கானது அல்ல. தமிழக மக்களின் நலனுக்கானது. எனவே. உன்னத நோக்கம் கொண்ட இந்தப் பயணத்தில் அனைத்துத் தரப்பு மக்களும் பெருமளவில் பங்கேற்று ஆதரவளிக்க வேண்டும். இவ்வாறு ராமதாஸ் கூறியுள்ளார்.