உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / நெல்லையப்பருக்கு வெள்ளித்தேர் 100 கிலோ வெள்ளி காணிக்கை

நெல்லையப்பருக்கு வெள்ளித்தேர் 100 கிலோ வெள்ளி காணிக்கை

சென்னை:திருநெல்வேலி நெல்லையப்பர் கோவிலுக்கு புதிய வெள்ளித்தேர் செய்ய, 100 கிலோ வெள்ளிக் கட்டிகளை வழங்கி, வெள்ளித்தகடு வேயும் பணியை, அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு துவக்கி வைத்தார். அறநிலையத்துறை செயலர் சந்தரமோகன், ஆணையர் ஸ்ரீதரன் பங்கேற்றனர்.பின், அமைச்சர் அளித்த பேட்டி:நெல்லையப்பர் கோவில் வெள்ளித்தேர், 1991ல் தீ விபத்து காரணமாக எரிந்து விட்டது. 33 ஆண்டுகளுக்கு பின் புதிய வெள்ளித்தேர் தயாரிக்கும் பணிகள் தொடங்கப்பட்டு, மரத்தேர் பணிகள் முடிந்துள்ளன. மரத்தேருக்கு வெள்ளி தகடுகள் வேயும் பணிக்கு, 450 கிலோ வெள்ளி தேவை. 9 கிலோ வெள்ளி நன்கொடையாளர்களால் வழங்கப்பட்டுள்ளது.தற்போது, நன்கொடையாளர்கள் ராஜரத்தினம், சபாபதி ஆகியோர், 100 கிலோ வெள்ளிக்கட்டிகளை நன்கொடையாக வழங்கியுள்ளனர். இதன் மதிப்பு, 1.2 கோடி ரூபாய். அடுத்தாண்டு ஜூலை மாதத்திற்குள் புதிய வெள்ளித்தேர் பயன்பாட்டுக்கு வரும். அறநிலையத்துறை கோவில்களில், 68 தங்கத் தேர்களும், 55 வெள்ளித் தேர்களும் உள்ளன. இந்த ஆட்சியில், 29 கோடி ரூபாய் மதிப்பில், 5 புதிய தங்கத் தேர்களும், 27.16 கோடி ரூபாய் மதிப்பில், ஒன்பது புதிய வெள்ளித் தேர்களும் உருவாக்கப்பட்டு வருகின்றன.மாநில வல்லுனர் குழுவால், 10,172 கோவில்களின் திருப்பணிக்கு ஒப்புதல் வழங்கப்பட்டுள்ளது. கடந்த ஆட்சியில், 10 ஆண்டுகளில், 1,000 கோவில்களுக்கு கூட, மாநில வல்லுனர் குழு ஒப்புதல் வழங்கவில்லை. மருதமலை சுப்பிரமணிய சுவாமி கோவிலுக்கு, 'இ- - பாஸ்' முறையை செயல்படுத்துவது குறித்து, கோவில் நிர்வாகமும், காவல் துறையும் அறிவித்துள்ளன. ஆய்விற்கு பின், 'இ- - பாஸ்' தேவையில்லை என்றால் ரத்து செய்து விடுவோம்.வெளிநாடுகளில் இருந்து வரும் பக்தர்களுக்கு, எளிதாக தரிசனம் மற்றும் போக்குவரத்து வசதிகள் செய்வது குறித்து ஆலோசனைகள் வழங்க, துறையில் தனிப் பிரிவு அமைத்து வருகிறோம்.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை