12 பேருக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு: ஐகோர்ட் உத்தரவு
மதுரை:நெல்லையைச் சேர்ந்த சாமி, மருதையா, குருநாதன் உட்பட, ஐந்து பேர் தாக்கல் செய்த ரிட் மனுவில், போலீஸ் துறையில் கிரேடு 2 போலீசாக பணியில் சேர்ந்தோம். தற்போது ஏட்டுகளாக பணிபுரிகிறோம். 30 ஆண்டுகள் பணி முடித்துள்ளோம். எங்களுக்கு எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்கப்படவில்லை. பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரினர்.புதுக்கோட்டை, தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த சிறப்பு எஸ்.ஐ., கருப்பையா உட்பட ஏழு பேர் தாக்கல் செய்த ரிட் மனுவில், எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க உத்தரவிட வேண்டும் என கோரினர். மனுதாரர்கள் சார்பில் வக்கீல்கள் ஏ.ராஜாராம், தங்கம் ஆஜராயினர். மனுக்களை விசாரித்த நீதிபதி கே.வெங்கட்ராமன், ''மனுதாரர்களுக்கு ஆறு வாரங்களுக்குள் எஸ்.ஐ., பதவி உயர்வு வழங்க, உள்துறை செயலர், டி.ஜி.பி., நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என உத்தரவிட்டார்.