மேலும் செய்திகள்
நாளை வேலை நிறுத்தம் தொழிற்சங்கங்கள் அறிவிப்பு
08-Jul-2025
சென்னை:விலைவாசி உயர்வை கட்டுப்படுத்த வேண்டும் என்பது உட்பட, 17 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று, 13 தொழிற்சங்கங்கள் சார்பில் வேலை நிறுத்தப் போராட்டம் நடந்தது. இருப்பினும், ரயில்கள், பஸ்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின.'விலைவாசி உயர்வை மத்திய அரசு கட்டுப்படுத்த வேண்டும்; பொதுத் துறை நிறுவனங்களில் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும்; பொதுத்துறை நிறுவனங்களை தனியாருக்கு தாரைவார்க்கக் கூடாது' என்பது உள்ளிட்ட, 17 கோரிக்கைகளை வலியுறுத்தி, சி.ஐ.டி.யு., - தொ.மு.ச., - ஏ.ஐ.டி.யு.சி., - ஐ.என்.டி.யு.சி., உட்பட, 13 தொழிற்சங்கங்கள், நேற்று ஒரு நாள் வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டன. பல்வேறு இடங்களில் சாலை மறியல், ரயில் மறியல் போராட்டங்கள் நடந்தன. இது குறித்து, சி.ஐ.டி.யு., மாநில தலைவர் சவுந்தரராஜன் அளித்த பேட்டி: அனைத்து மாநிலங்களிலும் நடந்த இந்த போராட்டத்தில், 30 முதல் 35 கோடி பேர் பங்கேற்றனர். வேலைவாய்ப்பை பெருக்குவது, மத்திய அரசின் திட்டத்தில் இல்லை. வேலைவாய்ப்பை சுருக்குதல், வேலையை பறித்தல், நிரந்தர வேலை உள்ள இடங்களில் கான்ட்ராக்ட்டை புகுத்துதல் என்பது தான் மத்திய அரசின் கொள்கையாக உள்ளது. வேலை நிறுத்தத்தால் நாடு முழுதும் பல்லாயிரம் கோடி ரூபாய் இழப்பு ஏற்பட்டு இருக்கலாம். தமிழகத்தில் தொழிலாளர்களுக்கு ஊதிய இழப்பு, 150 கோடி ரூபாய் ஆகி இருக்கும். பா.ஜ., அரசுக்கு எதிரான வேலை நிறுத்தம் என்பதால், அ.தி.மு.க., பங்கேற்கவில்லை.இவ்வாறு அவர் கூறினார். காப்பீடு,- வங்கி ஊழியர்கள்
வங்கிகள்,- காப்பீட்டு ஊழியர்கள் இணைந்து, சென்னை அண்ணா சாலையில் உள்ள எல்.ஐ.சி., அலுவலகம் முன் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அகில இந்திய காப்பீட்டு ஊழியர் சங்கத் தலைவர் ரமேஷ் கூறுகையில், ''காாப்பீட்டுத் துறையில் பணியாற்றும் ஊழியர்களில், 90 சதவீதத்தினர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்,'' என்றார்.அகில இந்திய வங்கி ஊழியர் சங்கத் தலைவர் வெங்கடாச்சலம் கூறுகையில், ''நாடு முழுதும், 80 சதவீத வங்கி ஊழியர்கள் போராட்டத்தில் பங்கேற்றுள்ளனர்,'' என்றார்.சென்னையில் உள்ள வருமான வரி அலுவலகமான ஆயக்கர் பவன், நேற்று மூடி கிடந்தது. வருமான வரி ஊழியர் சம்மேளனத்தின் அகில இந்திய தலைவர் வெங்கடேசன் கூறுகையில், ''தமிழகத்தில் உள்ள, 3,500 ஊழியர்கள் உட்பட, நாடு முழுதும் 40,000 பேர் வேலை நிறுத்தத்தில் பங்கேற்றுள்ளனர்,'' என்றார். ஜாக்டோ - ஜியோ
இந்த வேலை நிறுத்தத்தில், அரசு ஊழியர், ஆசிரியர்கள் சங்கங்களின் கூட்டமைப்பான ஜாக்டோ --ஜியோ அமைப்பினரும் பங்கேற்றனர். சென்னை எழிலகத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில், மாநில ஒருங்கிணைப்பாளர் வெங்கடேசன் தலைமையில், 300க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். பாதிப்பு இல்லை
தொழிற்சங்கங்கள், அரசு ஊழியர்களின் வேலை நிறுத்தப் போராட்டத்தால், அலுவலக பணிகள், வங்கி உள்ளிட்ட இதர சேவைகள் பாதிக்கப்பட்டன. ஆனால், மக்களின் இயல்பு வாழ்க்கையில் பெரிய அளவில் பாதிப்பு ஏற்படவில்லை. சென்னை உட்பட மாநிலத்தின் அனைத்து நகரங்களிலும், அரசு, தனியார் பஸ்கள், வழக்கம்போல் இயக்கப்பட்டன. மின்சார, விரைவு ரயில்கள், ஆட்டோக்கள் வழக்கம் போல் ஓடின. இருப்பினும், ஆங்காங்கே நடந்த மறியல் போராட்டத்தால், போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டது. இதனால், வாகன ஓட்டிகள் அவதிப்பட்டனர்.
08-Jul-2025