மணிபர்சில் வைத்திருந்த 2 தங்க வளையல் மாயம்
சேலம்: வீட்டில் மணிபர்சில் வைத்திருந்த, 40 கிராம் எடை கொண்ட, 2 தங்க வளையல்களை காணவில்லை என, ஓய்வு பெற்ற பெண் அதிகாரி, கன்னங்குறிச்சி போலீசில் புகார் அளித்துள்ளார். சேலம் கன்னங்குறிச்சி, நித்யா நகரை சேர்ந்தவர் ராஜி, 64. ஓய்வு பெற்ற தனியார் மருத்துவமனை ஊழியர். இவரது மனைவி ராணி, 61. இவர், மாவட்ட நகர் மற்றும் ஊரமைப்பு அலுவலகத்தில் உதவி இயக்குனராக பணிபுரிந்து ஓய்வு பெற்றவர். இவர்களுடைய மகன், சென்னையில் தங்கி, வங்கி ஒன்றில் வேலை செய்வதால், தம்பதி இருவரும் தனியாக வசிக்கின்றனர். வயது முதிர்வு காரணமாக கடந்த, 8 மாதங்களுக்கு முன், சமையல் வேலைக்காக மங்கா என்ற பெண்ணை வேலைக்கு வைத்துள்ளனர். கடந்த 4ம் தேதி ராணி, தன் கையில் அணிந்திருந்த, 6 தங்க வளையல்களையும் கழற்றி, மணிபர்சில் வைத்து, டைனிங் டேபிள் மீது வைத்துள்ளார். மறுநாள் பார்த்தபோது, 6ல், இரு வளையல்களை காணவில்லை. வீடு முழுதும் தேடியும் கிடைக்கவில்லை. காணாமல் போன வளையல், 40 கிராம் எடை கொண்டது. அதன் மதிப்பு, 3 லட்சம் ரூபாய். இதுகுறித்து, கன்னங்குறிச்சி போலீசில் ராணி அளித்த புகாரில், வளையல் மாயமான சம்பவத்தில், வீட்டு வேலை செய்யும் மங்கா மீது சந்தேகம் இருப்பதாக குறிப்பிட்டுள்ளார். அதன்படி, போலீசார் வழக்கு பதிந்து விசாரித்து வருகின்றனர்.