மேலும் செய்திகள்
கடலோர பாதுகாப்பு ஒத்திகை விழிப்புணர்வு கூட்டம்
12-Nov-2024
சென்னை:நாட்டின் கடல்சார் பாதுகாப்பை வலுப்படுத்த, இந்திய கடற்படை சார்பில் நாடு தழுவிய, 'சி- -- விஜில்' இரண்டு நாள் கடலோர பாதுகாப்பு ஒத்திகை நேற்று துவங்கியது.இது தொடர்பாக, இந்திய கடற்படையின் தமிழகம்,- புதுச்சேரி பிராந்திய தலைவர் ரவிக்குமார் திங்ரா, நேற்று அளித்த பேட்டி:கடந்த 2008ல், கடல் வழியாக மும்பைக்குள் நுழைந்த பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தினர். அதன்பின், கடலோரப் பாதுகாப்புக்கு அதிக முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது. முக்கியத்துவம்
அரசின் பல்வேறு துறைகள், அமைப்புகள், மீனவர்கள், உள்ளூர் மக்கள், மாணவர்களை ஒருங்கிணைத்து, 'சி-விஜில்' எனப்படும் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகையை கடற்படை நடத்தி வருகிறது.அதன்படி, இந்த ஆண்டுக்கான இரண்டு நாள் கடலோரப் பாதுகாப்பு ஒத்திகை நாடு முழுதும் துவங்கியுள்ளது. தமிழகம், 14 கடலோர மாவட்டங்கள், நீண்ட கடற்பரப்பை கொண்ட மாநிலம். கல்பாக்கம் அணு மின் நிலையம், முக்கிய துறைமுகங்கள் போன்ற பாதுகாப்பு முக்கியத்துவம் வாயந்த பகுதிகள் இங்குள்ளன.நாட்டில் உள்ள 11,098 கி.மீ., கடற்கரை பகுதிகள்முழுதும் நடக்கும் இப்பயிற்சியில், ஆறு மத்திய அமைச்சகங்கள், 21 மத்திய, மாநில அமைப்புகள் மற்றும் கடல்சார் பாதுகாப்புடன் தொடர்புடைய அமைப்புகள் ஈடுபட்டுள்ளன.துறைமுகங்கள், எண்ணெய்க் கசிவு போன்றவற்றால் பாதிக்கப்பட வாய்ப்பு உள்ளவையாக கணிக்கப்பட்டுள்ள பகுதிகள் உள்ளிட்ட கடலோர முக்கியத்துவம் வாய்ந்த பகுதிகளில், பாதுகாப்பு ஒத்திகை நடத்தப்பட்டது. ஒத்துழைப்பு
இந்த ஆண்டு, இந்திய ராணுவம், இந்திய விமானப்படை ஆகியவையும் இதில் ஈடுபட்டுள்ளன. ஒத்திகையில், தேசிய மாணவர் படை, நாட்டு நலப்பணித் திட்ட மாணவர்கள், மீனவர்கள், சாரணர்கள் உட்பட 2,000க்கும் அதிகமான மாணவர்கள் பங்கேற்றனர்.மேலும், 51 இடங்களில் கடலோர பாதுகாப்பு ஒத்திகையும், 60க்கும் மேற்பட்ட இடங்களில் கடல்சார் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டன. தமிழக காவல் துறையின் கடலோர பாதுகாப்பு குழுமம், மீன்வளத் துறை, வனத்துறை, ரயில்வே பாதுகாப்புப் படை போன்ற அமைப்புகள் முழு ஒத்துழைப்பை வழங்கின. இவ்வாறு அவர் கூறினார்.
12-Nov-2024