டெங்கு காய்ச்சலுக்கு 25,000 பேர் பாதிப்பு
சென்னை : வடகிழக்கு பருவமழையை ஒட்டி, 'ஏடிஸ் - ஏஜிப்டி' வகை கொசுக்களால் டெங்கு காய்ச்சல பாதிப்பு அதிகரித்துள்ளது. தினமும், 50க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்படுகின்றனர். சென்னை, கோவை, கிருஷ்ணகிரி, திருப்பத்துார், தேனி, மதுரை, திருநெல்வேலி, நாமக்கல், தஞ்சாவூர் மாவட்டங்களில், டெங்கு பாதிப்பு அதிகம் உள்ளது.டெங்குவால் உயிரிழப்பு பெரிய அளவில் இல்லை என்றாலும் அதற்கு பிந்தைய சுவாச தொற்று, நிமோனியா உள்ளிட்டவற்றால் உயிரிழப்புகள் அதிகரித்து வருகின்றன.பொது சுகாதாரத்துறை அதிகாரிகள் கூறியதாவது:பருவநிலை மாற்றத்தால், டெங்கு காய்ச்சல் பாதிப்பு காணப்படுகிறது. இந்த ஆண்டில் இதுவரை, 25,000க்கும் மேற்பட்டோர் பாதிக்கப்பட்டு உள்ளனர்; 12 பேர் இறந்துள்ளனர். அடுத்த மாதம் வரை, டெங்கு பாதிப்பு இருக்கும்.டெங்கு காய்ச்சல் உள்ளிட்ட பாதிப்புகளுக்கு தேவையான, பாராசிட்டமால், ஒசல்டாமிவிர், தொண்டை அடைப்பான், ரணஜன்னி, கக்குவான் இருமலுக்கான டி.பி.டி., தடுப்பூசிகள், ஓ.ஆர்.எஸ்., உப்பு - சர்க்கரை கரைசல், கிருமி தொற்றுக்கான அசித்ரோமைசின் மாத்திரைகள் போதிய அளவு கையிருப்பில் உள்ளன.நோயாளிகளின் எண்ணிக்கைக்கு ஏற்ப, தேவைக்கு ஏற்ப, தொடர்ந்து மருந்து, மாத்திரைகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. இதுவரை மருந்து தட்டுப்பாடு இல்லாத நிலையை உருவாக்கி கண்காணித்து வருகிறோம். இவ்வாறு அவர்கள் கூறினர்.