10 மாதத்தில் 254 போலீசார் உயிரிழப்பு
சென்னை : தமிழகத்தில் சாலை விபத்தில் சிக்கியும், மாரடைப்பு உள்ளிட்ட காரணங்களாலும், 10 மாதங்களில், 254 போலீசார் உயிரிழந்துள்ளனர்.நடப்பு ஆண்டில் அக்டோபர் வரையிலான, 10 மாதங்களில், போலீஸ் அதிகாரிகள் மற்றும் போலீசார் என, 254 பேர் உயிரிழந்துள்ளனர். உடல் நலக்குறைவு காரணமாக, 100 பேரும், சாலை விபத்துகளில், 59 பேரும், மாரடைப்பு காரணமாக, 43 பேரும் உயிரிழந்துள்ளனர்.அக்டோபரில் மட்டும் சாலை விபத்துகளில் சிக்கி, தலைமை காவலர், எஸ்.ஐ., மற்றும் கான்ஸ்டபிள் என ஒன்பது பேர் பலியாகியுள்ளனர். மாரடைப்பு காரணமாக, இன்ஸ்பெக்டர் உட்பட ஐந்து பேர் உயிரிழந்துள்ளனர்.'குறித்த நேரத்தில் உணவு உட்கொள்ள முடியாமை, பணிச்சுமை போன்ற காரணங்களால், மாரடைப்பு ஏற்பட்டு போலீசார் உயிரிழப்பது அதிகரித்து வருகிறது. 'காவல் துறையில் உள்ள, 15,000க்கும் மேற் பட்ட காலி பணியிடங்களை நிரப்பினால் பணிச்சுமை குறையும்' என்கின்றனர் போலீசார்.