சென்னை: 'சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறை, மக்கள் நலம் பெற துணைபுரியும் துறையாக வளர்ந்து அரசுக்கு பெருமை சேர்த்து வருகிறது' என, தமிழக அரசு தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:
மக்கள் நலனுக்காக செயல்படுத்தப்படும் திட்டங்களை தொடர்ந்து கண்காணித்து, அவற்றை மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வருவது, சிறப்பு திட்டங்கள் செயலாக்கத் துறையின் முக்கிய பணி. இத்துறை வாயிலாக, நான்கு ஆண்டுகளில், 30க்கும் அதிகமான துறைகளில், 2.59 லட்சம் இளைஞர்களுக்கு வேலை வாய்ப்பு தொடர்பாக, குறுகியகால திறன் பயிற்சி வழங்கப்பட்டு உள்ளது.தாம்பரம், சென்னை, கடலுார், சிவகங்கை, சேலம், திருநெல்வேலி ஆகிய இடங்களில், சமூகநல இல்லங்களில் தங்கி உள்ளவர்களுக்கு, தகவல் தொழில்நுட்ப திறன்களுடன், ஆங்கில தகவல் தொடர்பு, அலுவலக வரவேற்பாளர் பயிற்சிகள் வழங்கப்பட்டு உள்ளன. ஆதிதிராவிடர், பிற்படுத்தப்பட்ட மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்ட கல்லுாரி விடுதி மாணவர்கள், 2.59 லட்சம் பேருக்கு ஆங்கிலம் பேச பயிற்சி தரப்பட்டுள்ளது. தமிழகத்தில் உயர் கல்வியை மாற்றி அமைக்கக் கூடிய வெற்றி திட்டமாக, நான் முதல்வன் திட்டம் உள்ளது.இத்திட்டத்தின் கீழ், 41.3 லட்சம் மாணவர்கள், ஒரு லட்சம் விரிவுரையாளர்கள் பயிற்சி பெற்றுள்ளனர். 272 வேலைவாய்ப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, 2.60 லட்சம் மாணவர்களில் 63,949 மாணவர்கள் வேலை வாய்ப்பு பெற்றுஉள்ளனர். கலைஞர் மகளிர் உரிமைத் தொகை திட்டத்தின் கீழ், 1.15 கோடி பெண்களின் வங்கி கணக்கில் மாதந்தோறும் 1,000 ரூபாய் வரவு வைக்கப்படுகிறது. இத்திட்டம் விரிவுப்படுத்தப்பட உள்ளது.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.