ஓட்டு எண்ணிக்கை மையத்தில் 3 அடுக்கு பாதுகாப்பு வளையம்
திருப்பூர்: தாராபுரம் சட்டசபை தொகுதி இடைத்தேர்தல் ஓட்டுப்பதிவுக்கு பயன்படுத்தப்பட்ட மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள், நேற்று இரவு, மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்புடன் திருப்பூர் எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்தை வந்தடைந்தன. தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை மையம், திருப்பூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ளது. கல்லுாரி வளாகத்தில் உள்ள அண்ணா நுாற்றாண்டு நினைவு கட்டடத்தில், ஸ்ட்ராங் ரூம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை அறை அமைக்கப்பட்டுள்ளன. நேற்று ஓட்டுப்பதிவு முடிந்ததும், மின்னணு ஓட்டுப்பதிவு இயந்திரங்கள்(இ.வி.எம்.கள்) மற்றும் விவிபேட் உள்ளிட்ட தேர்தல் உபகரணங்கள் அனைத்தும் முறையாக சீல் வைக்கப்பட்டன. பின்னர், துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் வாகனங்களில் ஏற்றப்பட்டு, எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் உள்ள ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு கொண்டு வரப்பட்டன. 320 ஓட்டுச்சாவடிகளில் இருந்தும் ஓட்டுப்பதிவு இயந்திரங்கள் உள்ளிட்ட தேர்தல் தளவாடங்கள், நள்ளிரவு வரை மையத்துக்கு வந்து சேர்ந்தன. மழைநீர் தேக்கம்
இதற்கிடையே, திருப்பூர் மற்றும் சுற்றுப்பகுதிகளில் நேற்று முன்தினம் மாலை மற்றும் நேற்று காலை பலத்த மழை பெய்தது. இதனால், எல்.ஆர்.ஜி. கல்லுாரி வளாகத்தில் மழைநீர் தேங்கி, சேறும் சகதியுமாக காணப்பட்டது. இ.வி.எம்.களை ஏற்றி வந்த வாகனங்கள் ஓட்டு எண்ணிக்கை மைய வளாகத்துக்குள் சென்று வருவதில் சிரமம் ஏற்படும் நிலை உருவானதால், சீரமைப்பு பணிகள் துரிதப்படுத்தப்பட்டன. நேற்று காலை முதலே கல்லுாரி வளாகத்தில் தேங்கிய மழைநீர் அகற்றப்பட்டது. தொடர்ந்து, பொக்லைன் இயந்திரம் மூலம் மண் கொட்டி, சாலைகள் மற்றும் வாகனங்கள் செல்லும் பகுதிகள் சமன்படுத்தப்பட்டன. மூன்றடுக்கு பாதுகாப்பு
ஓட்டுப்பதிவு செய்யப்பட்ட இ.வி.எம்.கள், ஓட்டு எண்ணிக்கை மையத்துக்கு அருகே அமைக்கப்பட்டுள்ள ஸ்ட்ராங் ரூமில் பாதுகாப்பாக வைக்கப்பட்டுள்ளன. ஓட்டு எண்ணிக்கைக்காக மேஜைகள், கண்காணிப்பு கேமராக்கள், இணையதள வசதியுடன் கூடிய கம்ப்யூட்டர்கள் உள்ளிட்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டு தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. ஸ்ட்ராங் ரூம் மற்றும் ஓட்டு எண்ணிக்கை மையத்தின் உள்புறம், வெளிப்புற வளாகம் என அனைத்து பகுதிகளிலும் மூன்றடுக்கு போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. தேவையான இடங்களில் கண்காணிப்பு கோபுரங்களும் அமைக்கப்பட்டுள்ளன. 24 மணி நேரமும் கண்காணிக்கும் வகையில் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தாராபுரம் தொகுதி இடைத்தேர்தலுக்கான ஓட்டு எண்ணிக்கை, வரும் 9-ம் தேதி நடைபெற உள்ளது.