பொங்கல் பரிசு தொகுப்பு 33 லட்சம் பேர் வாங்கவில்லை
சென்னை:தமிழக அரசு, 2.21 கோடி அரிசி கார்டுதாரர்களுக்கு அறிவித்த பொங்கல் பரிசு தொகுப்பை, 85 சதவீதம் பேர் அதாவது, 1.87 கோடி பேர் வாங்கியுள்ளனர். மீதி, 33 லட்சம் பேர் வாங்கவில்லை. இதற்கு, 1,000 ரொக்க பணம் இடம் பெறாததே முக்கிய காரணம் என, ரேஷன் ஊழியர்கள்தரப்பில் கூறப்படுகிறது.தமிழக அரசு, பொங்கல் பண்டிகையை முன்னிட்டு, அரிசி கார்டுதாரர்களுக்கு, பொங்கல் பரிசு தொகுப்பு வழங்குகிறது. இந்தாண்டு பொங்கலுக்கு, 2.21 கோடி கார்டுதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை, முழு கரும்பு வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அவை, ரேஷன் கடைகள் வாயிலாக, இம்மாதம் 9ம் தேதி முதல் 13ம் தேதி வரை வழங்கப்பட்டன.மொத்த கார்டுதாரர்களில், 1.87 கோடி பேர் பொங்கல் தொகுப்பை வாங்கியுள்ளனர். இது, மொத்த கார்டுதாரர்களில், 85 சதவீதம்; மீதி, 33 லட்சம் பேர் வாங்கவில்லை. கடந்த ஆண்டு பொங்கலுக்கு, 2.20 கோடி கார்டுதாரர்களுக்கு தலா, 1,000 ரூபாய் ரொக்கம், கிலோ பச்சரிசி, சர்க்கரை, கரும்பு அடங்கிய பரிசு தொகுப்பு அறிவிக்கப்பட்டது. அவற்றை, 2.08 கோடி கார்டுதாரர்கள் வாங்கினர். இது, மொத்த கார்டுதாரர்களில், 95 சதவீதம். இதுகுறித்து, ரேஷன் ஊழியர்கள் கூறியதாவது:பொங்கல் தொகுப்பில், 1,000 ரூபாய் வழங்கிய போது, ரேஷன் கடைகளில் பொருட்கள் வாங்காதவர்கள் கூட, பொங்கல் தொகுப்பை வாங்கினர். இதற்காக, வீடுமாறி சென்றவர்களும், ரேஷன் கடை ஊழியர்களை தேடி வந்து, எந்த தேதி கடைக்கு வர வேண்டும் என்ற டோக்கனை பெற்றனர். பரிசு தொகுப்பையும் வாங்கி சென்றனர்.இந்த முறை பணம் இடம் பெறாததால், 'டோக்கன்' வழங்கிய போதே, பலர் வாங்கவில்லை. முந்தைய ஆண்டுடன் ஒப்பிடும் போது, இந்தாண்டு பொங்கல் தொகுப்பை அதிகம் பேர் வாங்காததற்கு, பணம் இல்லாததே காரணம். இவ்வாறு அவர் கூறினார்.