விபத்தில் இறந்த வாலிபர் குடும்பத்துக்கு ரூ.33 லட்சம்
சென்னை:சரக்கு வாகனத்தில் இருந்து துாக்கி வீசப்பட்டு உயிரிழந்த, ஆந்திர வாலிபரின் குடும்பத்திற்கு, 32.64 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது. ஆந்திர மாநிலம், சித்துாரைச் சேர்ந்தவர் நரசிம்மலு, 34. சரக்கு வாகனத்தில் கிளீனராக பணிபுரிந்து வந்தார். கடந்த 2020 ஜன., 18ல், சரக்கு வாகனத்தில், சென்னையில் இருந்து ஆந்திரா சென்றார். திருவள்ளூர் மாவட்டம், பெரவள்ளூர் அருகே சென்றபோது, எதிர்பாராதவிதமாக மற்றொரு வாகனம் மீது மோதியது.சரக்கு வாகனத்தில் இருந்த நரசிம்மலு, வெளியே துாக்கி வீசப்பட்டார். பலத்த காயமடைந்தவரை, அருகிலிருந்தோர் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் இறந்தார். அவரது இறப்புக்கு, 49 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்கக் கோரி, சென்னை மோட்டார் வாகன விபத்து இழப்பீடு தீர்ப்பாயத்தில், நரசிம்மலு மனைவி பத்மா உள்ளிட்டோர் வழக்கு தொடர்ந்தனர். இந்த வழக்கு, சிறு வழக்குகளுக்கான முதன்மை நீதிமன்ற நீதிபதி டி.லிங்கேஸ்வரன் முன் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதி, 'மனுதாரர்களுக்கு இழப்பீடாக, 32.64 லட்சம் ரூபாயை, ஆண்டுக்கு 7.5 சதவீத வட்டியுடன், தி நியூ இந்தியா அஷ்யூரன்ஸ் நிறுவனம் வழங்க வேண்டும்' என, உத்தரவிட்டார்.