உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / வீடு, மனை விற்பனையில் 333 வழக்குகளுக்கு தீர்வு

வீடு, மனை விற்பனையில் 333 வழக்குகளுக்கு தீர்வு

சென்னை : வீடு, மனை வாங்குவது தொடர்பாக, 2024ல் எழுந்த, 333 புகார்கள், வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு உள்ளதாக, ரியல் எஸ்டேட் ஆணையம் தெரிவித்துள்ளது. ரியல் எஸ்டேட் ஆணையத்தில், மூன்று நிலைகளில் வீடு, மனை திட்டங்கள் தொடர்பான வழக்குகள் விசாரிக்கப்படுகின்றன. அதன்படி, ஆணையத்தின் தலைவர் தலைமையிலான முழு அமர்வு, கட்டுமான திட்டங்கள் தொடர்பாக, 'எம்' படிவத்தில் குறிப்பிடப்படும் முறைகேடுகள் தொடர்பாக விசாரிக்கும். இதற்கு அடுத்தபடியாக, ஒரு நபர் அமர்வு, பணத்தை திரும்ப பெறுதல் தொடர்பான வழக்குகளை விசாரிக்கும். இதையடுத்து, இழப்பீடுகள் கோரும் வழக்குகளை, விசாரணை அதிகாரி அமர்வு விசாரிக்கும். கடந்த 2023ம் ஆண்டில் மூன்று நிலைகளிலும் சேர்த்து, 459 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்ட நிலையில், 2024ல், 333 வழக்குகளுக்கு மட்டுமே தீர்வு காணப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆணைய இணையதளத்தில் வெளியிடப்பட்ட உத்தரவுகள் அடிப்படையில் கணக்கிட்டதில், 2024ல் முடிக்கப்பட்ட வழக்குகள் எண்ணிக்கை குறைந்துள்ளது. ஆணையத்தில், 2024ல் தலைவர் நியமனத்தில் தாமதம் ஏற்பட்டதால், சில மாதங்கள் பிரதான அமர்வு விசாரணை நடத்தப்படாமல் இருந்தது. இதேபோன்று, விசாரணை அலுவலர் நியமனத்தில் ஏற்பட்ட தாமதம் காரணமாக, இழப்பீடு வழக்குகள் முடிப்பதிலும் தாமதம் ஏற்பட்டதாக கட்டுமான துறையினர் தெரிவிக்கின்றனர். கடந்த 2023, 2024 ஆண்டுகளில் முடிக்கப்பட்ட வழக்குகள் குறித்து இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ள விபரம்:

பிரிவு / 2023 / 2024

'எம்' படிவ வழக்குகள் / 148 / 35 ஒரு நபர் அமர்வு / 249 / 161 இழப்பீடு வழக்குகள் / 62 / 137 மொத்தம் / 459 / 333


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !