சென்னை: தமிழகத்தில் மதுரை, ஊட்டி, கூடலூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை கொட்டித் தீர்த்தது. சாலைகளில் தண்ணீர் பெருக்கெடுத்து ஓடியது. வெப்பம் தணிந்து குளிர்ச்சி அடைந்துள்ளது. இதற்கிடையே தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுத்த வானிலை மையம், அந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றது.தமிழகத்தில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்ட நிலையில் பல்வேறு பகுதிகளில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது. மதுரை, ஊட்டி, கூடலூர், நாகர்கோவில் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் கனமழை பெய்ந்து வருகிறது. நாகர்கோவில் பகுதிகளில் பெய்த மழை காரணமாக, வீடுகளுக்குள் மழைநீர் புகுந்ததால் மக்கள் அவதி அடைந்துள்ளனர்.திருநெல்வேலி, தூத்துக்குடியில் சாரல் மழை பெய்தது. ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் அருகே கன மழை காரணமாக குளத்தில் உடைப்பு ஏற்பட்டுள்ளது. திண்டுக்கல், கொடைக்கானல் தாண்டிக்குடி, பண்ணைக்காடு உள்ளிட்ட பகுதிகளில் நேற்று மாலை முதல் இரவு வரை கனமழை பெய்தது. ஊட்டி, கூடலூர், கும்பகோணம், அய்யம்பேட்டை உள்ளிட்ட பல்வேறு இடங்களில் மிதமான மழை பெய்தது. இதற்கிடையே தமிழகத்திற்கு 'ரெட் அலர்ட்' விடுத்த வானிலை மையம், அந்த எச்சரிக்கையை வாபஸ் பெற்றது. 7 மாவட்டங்களில் மிக கனமழை
இது குறித்து சென்னை வானிலை மையம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: தேனி, திண்டுக்கல், திருப்பூர், கோவை, நீலகிரி, புதுக்கோட்டை, தஞ்சாவூர் ஆகிய 7 மாவட்டங்களில் இன்று (மே 20) மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. கன்னியாகுமரி, திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, ராமநாதபுரம், விருதுநகர், மதுரை, சிவகங்கை, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை ஆகிய 11 மாவட்டங்களில் இன்று கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.நாளை (மே 21)
தேனி, தென்காசி, திருநெல்வேலி ஆகிய 3 மாவட்டங்களில் நாளை மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.மே 22ம் தேதி
தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி ஆகிய 4 மாவட்டங்களில் வரும் மே 22ம் தேதி மிக கனமழைக்கு வாய்ப்புள்ளது. தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்காலில் ஒரு வாரத்திற்கு கனமழை பெய்ய வாய்ப்புள்ளது. சென்னையில் அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில இடங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.