"காடுகள் அழிய ஆங்கிலேயர்களே காரணம்
கோவை: 'ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போதுதான் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டன'' என்று, தமிழ்நாடு வேளாண் பல்கலை துணைவேந்தர் முருகேசபூபதி பேசினார். கோவை வனமரபு மற்றும் மரபெருக்கு நிறுவனம் சார்பில், ஐ.எப்.எஸ்., அதிகாரிகளுக்கு, 'வன மரபு வள மேலாண்மை' என்னும் தலைப்பில் ஒரு வார புத்தாக்க பயிற்சி வகுப்பின் துவக்க விழா நடந்தது. வனமரபு மற்றும் மரபெருக்கு நிறுவன ஆய்வு குழு ஒருங்கிணைப்பாளர் ரகுநாத் வரவேற்றார். வேளாண் பல்கலை துணை வேந்தர் முருகேசபூபதி பேசியதாவது:பழங்கால இந்தியா, மிகப்பெரிய வனப்பகுதியை கொண்டிருந்தது. சந்திர குப்த மவுரியர் காலத்தில், காடுகளையும், வன உயிரிகளையும் பாதுகாக்க தனி அமைச்சகத்தை உருவாக்கினர். மொகலாயர்கள் ஆட்சியிலும் காடுகள் பாதுகாக்கப்பட்டன. ஆங்கிலேயர்கள் இந்தியாவை ஆண்ட போதுதான் பெருமளவில் காடுகள் அழிக்கப்பட்டன. தண்டவாளங்களில் பயன்படுத்தும், 'ஸ்லீப்பர்' கட்டைகளுக்காகவும், வணிக நோக்கத்துக்காகவும் பல லட்சம் மரங்கள் வெட் டப்பட்டன. இந்தியாவில் காடுகளின் பரப்பு குறைய இதுவே முக்கிய காரணம். உலகில் உள்ள முக்கியமான உயிர்ச் சூழல் மண்டலங்களில் நான்கு இந்தியாவில்தான் உள்ளன. அதில் இங்குள்ள நீலகிரி உயிர்ச் சூழல் மண்டலமும் ஒன்று. ஒரு நாட்டின் வளர்ச்சிக்கு முதுகெலும்பாக இருப்பது காடுகள்தான். பூமியின் நுரையீரலாக இருக்கும் மரங்கள், காற்றை மட்டும் சுத்தப்படுத்துவதில்லை; பல்லுயிர் சூழலையும் பாதுகாக்கிறது. நாளுக்கு நாள் மரங்களின் எண்ணிக்கை குறைந்து கொண்டே வருவதால் மரங்களை உருவாக்க வேண்டியது அவசியமாகிறது. அதற்கு இது போன்ற பயிற்சி வகுப்புக்கள் வன அதிகாரிகளுக்கு அவசியம். இவ்வாறு, முருகேசபூபதி பேசினார்.டில்லி, பயிர் பாதுகாப்பு மற்றும் உழவர் உரிமை ஆணைய தலைவர் கவுதம் பேசுகையில்,'கற்பதற்கான நல்ல சூழ்நிலை இங்கு நிலவுவதால், வனமரபு வள மேலாண்மை குறித்த பயிற்சி வகுப்பை இங்கு நடத்துவதுதான் சிறப்பானது. வனமரபு வளம் என்பது மரத்தை மட்டும் சார்ந்ததல்ல, சிறு தாவரங்கள், பறவைகள், பூச்சிகள் என, பல்லுயிர் சூழலையும் உள்ளடக்கியது. இவற்றை பாதுகாக்கும் திறனை வளர்த்து கொள்ள இந்த வகுப்பு உதவும்,'' என்றார். வனமரபு மற்றும் மரப்பெருக்கு நிறுவன இயக்குனர் கிருஷ்ணகுமார், பயிற்சி இயக்குனர் ரவிச்சந்திரன், ஆராய்ச்சியாளர் கார்த்திகேயன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.