மாணவர்களை பயன்படுத்தி ‘மெகா’ மோசடி டிரஸ்டில் பணியாற்றிய மேலும் 4 பேர் சிக்கினர்
சேலம்: கல்லுாரி மாணவர்களின் ஆதார் கார்டை பயன்படுத்தி, 75 கோடி ரூபாய் வரை மோசடி செய்யப்பட்டதாக எழுந்த புகாரில், ‘பெஸ்ட் எம்பவர்மென்ட்’ டிரஸ்டில் பணியாற்றிய, மேலும், 4 ஊழியர்கள் கைது செய்யப்பட்டனர். சேலம், சின்னதிருப்பதியை சேர்ந்த குமரன் மனைவி கண்ணகி, 45. சேலம், பெண்கள் கிளை சிறை பகுதியில், ‘பெஸ்ட் எம்பவர்மென்ட்’ பெயரில் டிரஸ்ட் நடத்துகிறார். இதன்மூலம் சேலம், நாமக்கல், தர்மபுரி மாவட்டங்களை சேர்ந்த, கல்லுாரி மாணவர்களின் ஆதார் கார்டுகளை பெற்று, தனியார் வங்கியில் விவசாய கடன் பெயரில், 75 கோடி ரூபாய் வரை மோசடி நடந்ததாக புகார் எழுந்துள்ளது. இதுகுறித்து பாதிக்கப்பட்ட மாணவர்கள் அளித்த புகாரால், சேலம் மாநகர் மத்திய குற்றப்பிரிவு போலீசார் விசாரித்து, டிரஸ்ட் நிர்வாகி கண்ணகி, அவரது கூட்டாளி முத்துகுமரனை, நேற்று முன்தினம் கைது செய்தனர். அவர்களிடம் விசாரித்த பின், அந்த டிரஸ்ட்டில் பணியாற்றிய, மேலும், 4 பேரை, நேற்று போலீசார் கைது செய்தனர். இதுகுறித்து போலீசார் கூறியதாவது: அறக்கட்டளையில், 10 பேர் பணிபுரிகின்றனர். அவர்கள் கல்லுாரி மாணவர்களுக்கு கமிஷன் தருவதாக கூறி, ஆதார் எண் பெற்றுள்ளனர். பீல்டு ஆபீசரான, கன்னங்குறிச்சியை சேர்ந்த மோனிஷா, 28, உள்ளிட்ட பணியாளர்கள், விண்ணப்பத்தை பூர்த்தி செய்து, வங்கியில் கறவை மாடு கடன் வாங்கி மோசடி செய்துள்ளனர். அதனால் மோனிஷா, ஊழியர்களான, வேடுகத்தாம்பட்டி அரவிந்த், 23, ஓமலுார், பச்சனம்பட்டி அஜித்குமார், 27, புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி சுகுமார், 30, ஆகியோரும் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களிடம் விசாரித்த பின், எத்தனை மாணவர்கள் பாதிக்கப்பட்டனர், மோசடி பணம் குறித்து தெரிய வரும். இந்த மோசடியில் பாதிக்கப்பட்ட மாணவர்கள், மத்திய குற்றப்பிரிவு போலீசில் புகார் அளிக்கலாம். இவ்வாறு அவர் கூறினார்.