60 சதவீத குவாரிகள், கிரஷர்கள் வேலைநிறுத்தம் கட்டுமான பொருட்கள் விலை உயரும் அபாயம்
ஓசூர்:தமிழக அரசின் புதிய விதிமுறையால், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 60 சதவீத குவாரிகள், கிரஷர்கள் வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. இதனால், கட்டுமானப் பொருட்களின் விலை உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது.கிருஷ்ணகிரி மாவட்டத்தில் உள்ள 303 குவாரிகளில், 103 குவாரிகள் செயல்படுகின்றன. அவற்றில் வெட்டி எடுக்கப்படும் கற்களை எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லியாக மாற்றி விற்பனைக்கு அனுப்ப, 72க்கும் மேற்பட்ட கிரஷர்கள் இயங்கி வருகின்றன. டன்னுக்கு ரூ.60
எம்.சாண்ட், பி.சாண்ட், ஜல்லி போன்ற கனிமங்களுக்கு, 1 டன்னுக்கு 60 ரூபாயை ராயல்டி கட்டணமாக, குவாரி உரிமையாளர்கள் செலுத்த வேண்டும். மேலும், மாவட்ட வளர்ச்சி நிதி, கர்நாடக மாநிலத்திற்கு கனிமங்களை கொண்டு செல்ல பசுமை வரி, டி.டி.எஸ்., கட்டணம் என, 1 டன்னுக்கு 38 ரூபாய் தனியாக செலுத்த வேண்டும். இந்நிலையில், குவாரிகள் இருக்கும் நிலங்களுக்கான வரி எனக்கூறி, 1 டன்னுக்கு 90 ரூபாய் செலுத்த அரசாணை வெளியிடப்பட்டு உள்ளது. இதுவரை 1 கன மீட்டரை, 1.75 டன் என நிர்ணயித்திருந்த தமிழக அரசு, தற்போது கன மீட்டர் 2.75 டன் என்று அறிவித்துள்ளது. இதனால், மொத்தம் 150 ரூபாய் அளவிற்கு, 1 டன்னுக்கு அரசுக்கு குவாரி உரிமையாளர்கள் கூடுதலாக செலுத்த வேண்டியுள்ளது. இதற்கு எதிர்ப்பு தெரிவித்து, கிருஷ்ணகிரி மாவட்ட குவாரி உரிமையாளர்கள் கடந்த மூன்று நாட்களாக, குவாரிகள் மற்றும் கிரஷர்களை இயக்காமல், வேலை நிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டு உள்ளனர். இதனால், கட்டுமானப் பொருட்களுக்கு தட்டுப்பாடு ஏற்பட்டு, விலை உயரும் அபாயம் உருவாகியுள்ளது. அத்துடன், அரசு மற்றும் தனியார் கட்டடப் பணிகள் பாதிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது. நிதிச்சுமை
இது குறித்து, ஓசூர் கிரஷர் ஓனர் பெடரேஷன் தலைவர் சம்பங்கி கூறியதாவது:தற்போது 1 டன் ஜல்லி, 480 ரூபாய்; எம்.சாண்ட், 680; பி.சாண்ட், 780 ரூபாய் என விற்பனை செய்யப்படுகிறது. அரசின் புதிய நடைமுறையால், கட்டுமானப் பொருட்களின் விலையை 1 யூனிட்டிற்கு, 500 ரூபாய் வரை உயர்த்த வேண்டி வரும். அதை, மக்கள் ஏற்க மாட்டார்கள். அதனால், கூடுதல் நிதிச்சுமை, குவாரி உரிமையாளர்கள் தலை மீது தான் விழும். ஒரு டிராக்டரில், 5 டன் அளவிற்கும்; டாரஸ் லாரியில், 31.50 டன் அளவிற்கு மட்டுமே கனிமங்களை ஏற்ற முடியும். ஆனால், ஒரு டிராக்டருக்கு, 9 டன் மற்றும் டாரஸ் லாரிகளுக்கு, 55 டன் அளவிற்கு வாகனத்துடன் கனிமங்களை கணக்கிட்டு, அதற்கான ராயல்டி மற்றும் குவாரி செயல்படும் நிலத்திற்கான வரியை செலுத்த அரசு கூறுகிறது. ஒவ்வொரு மாதத்திற்கும், ஒரு குவாரியில் வெட்டி எடுக்கப்படும் கனிமத்திற்கு, 12 லட்சம் ரூபாய் வரை அரசுக்கு ராயல்டியாக செலுத்துகிறோம். தற்போது அறிவிக்கப்பட்டுள்ள புதிய நடைமுறையால், 50 லட்சம் ரூபாய் அளவிற்கு செலுத்த வேண்டி வரும். இதனால், தொழில் செய்ய முடியாது. நாளை ஆலோசனை
எனவே, மாவட்டத்தில், 60 சதவீதத்திற்கும் மேலான குவாரிகள், கிரஷர்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளன. ஏற்கனவே, இந்த மாதத்திற்கு ராயல்டி செலுத்தி உரிமம் வாங்கியுள்ள 40 சதவீத குவாரிகள் மட்டுமே தற்போது செயல்படுகின்றன. தமிழகம் முழுதும் இதே நிலை தான். நாளை திருச்சியில் நடக்கும் ஆலோசனை கூட்டத்தில், அடுத்த கட்ட போராட்டம் குறித்து முடிவெடுப்போம்.இவ்வாறு அவர் கூறினார்.