செந்தில் பாலாஜிக்கு 61வது முறை காவல் நீட்டிப்பு
சென்னை:சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், அமலாக்கத்துறையால் கடந்தாண்டு ஜூனில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி கைது செய்யப்பட்டார். கடந்தாண்டு ஆகஸ்டில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது. ஓராண்டுக்கு பின், கடந்த மாதம் செந்தில் பாலாஜிக்கு எதிராக குற்றச்சாட்டு பதிவு செய்யப்பட்டு, சாட்சி விசாரணை நடந்து வருகிறது.இந்நிலையில், புழல் சிறையில் உள்ள செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் நேற்றுடன் முடிந்தது. புழல் சிறையில் இருந்து, 'வீடியோ கான்பரன்ஸ்' வாயிலாக, சென்னை முதன்மை அமர்வு நீதிமன்ற நீதிபதி எஸ்.அல்லி முன், நேற்று பிற்பகல் செந்தில் பாலாஜி ஆஜர்படுத்தப்பட்டார்.பின், அவரின் நீதிமன்ற காவலை, 61வது முறையாக, வரும் 26ம் தேதி வரை நீட்டித்து நீதிபதி உத்தரவிட்டார். சட்ட விரோத பணப்பரிமாற்ற தடை சட்ட வழக்கில், இதுவரை மூன்று சாட்சிகள் விசாரணை, குறுக்கு விசாரணையும் நிறைவு பெற்றது. நான்காவதாக, தடய அறிவியல் துறையின் கணினி தடயவியல் உதவி இயக்குனர் மணிவண்ணன் நேற்று சாட்சியம் அளித்தார்.இதையடுத்து, செந்தில் பாலாஜி தரப்பு குறுக்கு விசாரணைக்காக, வழக்கு வரும் 26ம் தேதிக்கு தள்ளிவைக்கப்பட்டது.