உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 748 பேருக்கு புதிதாக எச்.ஐ.வி., பாதிப்பு

748 பேருக்கு புதிதாக எச்.ஐ.வி., பாதிப்பு

சென்னை : “தமிழகத்தில் புதிதாக, 748 பேருக்கு எச்.ஐ.வி., பாதிப்பு கண்டறியப்பட்டு, கூட்டு மருத்துவ சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது,” என, மக்கள் நல்வாழ்வு துறை அமைச்சர் சுப்பிரமணியன் கூறினார்.சென்னை எழும்பூரில் உள்ள தமிழ்நாடு எய்ட்ஸ் கட்டுப்பாட்டு திட்ட இயக்குனரகத்தில், விழிப்புணர்வு நிகழ்ச்சி நேற்று நடந்தது. இதில், அமைச்சர் சுப்பிரமணியன் பேசியதாவது:எச்.ஐ.வி., என்ற எய்ட்ஸ் பாதிப்பு படிப்படியாக குறைந்து வருகிறது. இந்திய அளவில், 0.23 சதவீதமாக எச்.ஐ.வி., பாதிப்பு இருக்கும் நிலையில், தமிழகத்தில், 0.16 சதவீதமாக உள்ளது. இதை, பூஜ்ஜியமாக குறைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதற்காக, எச்.ஐ.வி., கண்டறியும் 3,161 பரிசோதனை மையங்கள், 74 கூட்டு மருந்து அளிக்கும் மையங்கள் செயல்பட்டு வருகின்றன.எச்.ஐ.வி., நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்து உள்ளிட்டவற்றுக்கு, 5 கோடி ரூபாயில், கடந்த 2009ல் அறக்கட்டளை துவங்கப்பட்டது. தற்போது, 25 கோடி ரூபாய் வரை வழங்கப்படுகிறது. இதன் வாயிலாக, 7,303 குழந்தைகளுக்கு உதவிகள் செய்யப்படுகின்றன.மாணவர்கள் மற்றும் பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்த, 'ரெட் ரிப்பன் கிளப்' அனைத்து மருத்துவ கல்லுாரிகளிலும் விரைவில் துவங்கப்படும். மாநில அளவில் சிறப்பு முகாம்கள் நடத்தப்பட்டு, இந்தாண்டில், 73,560 பேரிடம் பரிசோதனை செய்யப்பட்டது. அதில், 748 பேருக்கு புதிதாக இந்நோய் கண்டறியப்பட்டு, கூட்டு மருத்துவ சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. எய்ட்ஸ் பாதிப்பு குறித்து, தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதனால், வருங்காலங்களில் பெரியளவில் பாதிப்பு குறையும். இவ்வாறு அவர் கூறினார்.பா.ம.க.,வும் பாராட்டும்- அமைச்சர் சுப்பிரமணியன்.

வெள்ளம் பாதிக்கப்பட்ட மாவட்டங்களில், புனரமைப்பு பணிகளுக்காக முதல் கட்டமாக, மத்திய அரசிடம் 2,000 கோடி ரூபாய் கேட்கப்பட்டுள்ளது. இதற்காக, விரைவில் மத்திய குழுவினர் தமிழகம் வர உள்ளனர். கடந்தாண்டு பாதிப்புகளுக்கு மத்திய அமைச்சர்கள், குழுவினர் பார்வையிட்டு சென்ற போதிலும். நிதி வழங்கப்படவில்லை. ஆனாலும், தமிழக அரசு நிவாரணம் அறிவித்துள்ளது. இதை, பா.ம.க.,வும் பாராட்டும் என்று நம்புகிறேன்.

கடலுார், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை உள்ளிட்ட மாவட்டங்களில், சிறப்பு மருத்துவ முகாம்கள் நடத்தப்பட்டு வருகின்றன. ஐ.ஏ.எஸ்., அதிகாரி ராதாகிருஷ்ணன் கண்காணித்து வருகிறார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை