உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / முதல்வர் மருந்தகம் அமைக்க இதுவரை 856 பேர் விண்ணப்பம்

முதல்வர் மருந்தகம் அமைக்க இதுவரை 856 பேர் விண்ணப்பம்

சென்னை: பிரதமரின் மக்கள் மருந்தகம் காரணமாக, தமிழக அரசு அறிவித்த முதல்வர் மருந்தகம் அமைக்க, மக்கள் ஆர்வம் காட்டவில்லை. இதுவரை, 856 பேர் மட்டுமே விண்ணப்பித்துள்ளனர்.நாட்டு மக்களுக்கு மலிவான விலையில், மருந்து, மாத்திரைகள் கிடைக்க, பிரதமரின் பாரதிய மக்கள் மருந்தகம், 2014ல் துவக்கப்பட்டது. நாடு முழுதும், 10,000க்கும் மேற்பட்ட மக்கள் மருந்தகங்கள் செயல்படுகின்றன. தமிழகத்தில் சென்னை, ஹரியானாவில் உள்ள குருகிராம், கர்நாடகாவில் பெங்களூரு, அசாம் மாநிலம் கவுகாத்தி, குஜராத்தில் சூரத் ஆகிய இடங்களில், இதற்கான மருந்து கிடங்குகள் உள்ளன. இம்மருந்தகங்களில் இதயம், புற்றுநோய், நீரிழிவு, தொற்று, ஒவ்வாமை உள்ளிட்ட நோய்களுக்கு, 1,963 வகையான மருந்துகள் உள்ளன. மேலும், 293 அறுவை சிகிச்சை சாதனங்கள் விற்கப்படுகின்றன. ஆண்டுக்கு, 1,000 கோடி ரூபாய் வரை விற்பனை நடக்கிறது. இந்த மருந்தகங்கள் நடத்துவதற்கு, https://janaushadhi.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பிக்கலாம்.இந்நிலையில், தமிழக அரசு சார்பில், மூலப்பெயர் என்ற ஜெனரிக் மருந்துகளையும், பிற மருந்துகளையும் குறைந்த விலையில், பொதுமக்களுக்கு விற்க, 1,000 முதல்வர் மருந்தகங்கள் துவக்கப்படும் என, முதல்வர் அறிவித்தார். இதில், மருத்துவம் சார்ந்த இதர மருத்துவ உபகரணங்கள், சித்தா, ஆயுர்வேதம், இம்ப்காப்ஸ், டாம்ப்கால், யுனானி மருந்துகளும் விற்பனை செய்யப்பட உள்ளன. முதல்வர் மருந்தகம் அமைக்க, விருப்பமுள்ள மருந்தியல் பட்டதாரிகள், கூட்டுறவுத்துறை வாயிலாக, https://mudhalvarmarundhagam.tn.gov.inஎன்ற இணையதளத்தில் விண்ணப்பித்து வருகின்றனர். இதுவரை, 856 விண்ணப்பங்கள் கூட்டுறவு துறை வாயிலாக பெறப்பட்டு, மருந்து கட்டுப்பாட்டு துறையின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டு உள்ளன. வரும் ஜனவரியில், மருந்தகங்கள் செயல்பாட்டுக்கு கொண்டு வரப்படும் என்று தெரிவிக்கப்பட்ட நிலையில், இலக்கை விட குறைவாகவே, முதல்வர் மருந்தகம் அமைக்க, விண்ணப்பங்கள் வந்துஉள்ளன.மத்திய அரசின் மக்கள் மருந்தகத்திற்கு, மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பு உள்ளதால், முதல்வர் மருந்தகம் துவக்க, பலர் ஆர்வம் காட்டவில்லை என்று கூறப்படுகிறது. இது குறித்து, மருந்து கட்டுப்பாட்டு அதிகாரிகள் கூறுகையில், 'முதல்வர் மருந்தகத்திற்கு, 220 ஜெனரிக் மருந்துகள் கொள்முதல் செய்யப்படுகின்றன. எனவே, திட்டமிட்டபடி, ஜனவரி மாதத்தில் மருந்தகம் துவக்கப்படும். அதற்குள், 1,000க்கும் மேற்பட்டோர் விண்ணப்பிக்க வாய்ப்புள்ளது' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி