உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / 9.14 டி.எம்.சி., நீர்: தமிழகத்திற்கு கர்நாடகா நிலுவை

9.14 டி.எம்.சி., நீர்: தமிழகத்திற்கு கர்நாடகா நிலுவை

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சென்னை: தமிழகத்திற்கு ஆண்டுதோறும், 177.25 டி.எம்.சி., காவிரி நீரை கர்நாடக அரசு வழங்க வேண்டும். மாதந்தோறும் வழங்க வேண்டிய நீரின் அளவை, காவிரி மேலாண்மை ஆணையம் நிர்ணயம் செய்துள்ளது. ஆனால், மாத ஒதுக்கீட்டு நீரை கர்நாடகா வழங்குவது கிடையாது.வெள்ள காலங்களில் உபரி நீரை திறந்து கணக்கு காட்டி வருகிறது. கடந்த ஜூலை மற்றும் ஆகஸ்ட் மாதங்களில் கர்நாடகாவில் கனமழை கொட்டி தீர்த்தது. அங்குள்ள ஹேரங்கி, ஹேமாவதி, கபினி, கே.ஆர்.எஸ்., அணைகள் நிரம்பியதால், அதிலிருந்து தமிழகத்திற்கு உபரி நீர் அதிகளவில் திறக்கப்பட்டது.இதனால், ஜூன் முதல் செப்., வரை தமிழகத்திற்கு, 204 டி.எம்.சி., வெள்ள உபரி நீரை கர்நாடகா வழங்கியுள்ளது. இந்த காலகட்டத்தில், 123 டி.எம்.சி., மட்டுமே தமிழகத்திற்கு கிடைத்திருக்க வேண்டும். கூடுதலாக 81.6 டி.எம்.சி., நீர் வந்துள்ளது. அதேநேரம் செப்டம்பரில், 36.7 டி.எம்.சி., நீரை கர்நாடகா திறக்க வேண்டும். ஆனால், 27.6 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு, 9.14 டி.எம்.சி., நீர் நிலுவை வைக்கப்பட்டுள்ளது. மேட்டூர் அணையின் நீர் இருப்பு, 57.4 டி.எம்.சி.,யாக குறைந்துள்ளது.அணையில் இருந்து டெல்டா மாவட்டங்களின் பாசனம் மற்றும் குடிநீர் தேவைக்காக, நாள்தோறும் 1.29 டி.எம்.சி., நீர் திறக்கப்பட்டு வருகிறது. வடகிழக்கு பருவமழை ஏமாற்றினால், அடுத்த 45 நாட்களில் அணை வறண்டு விடும் வாய்ப்புள்ளது. கோடையில் குடிநீர் தேவையை பூர்த்தி செய்வதில் சிக்கல் ஏற்படும். எனவே மாத ஒதுக்கீட்டு நீரை, கர்நாடகாவிடம் முறைப்படி பெற வேண்டிய அவசியம் எழுந்துள்ளது. ஆனால், காவிரி மேலாண்மை ஆணையம், காவிரி நீர் முறைப்படுத்தும் குழு கூட்டங்களில், தமிழகத்திற்கு ஆண்டு ஒதுக்கீட்டை விட அதிக நீர் திறக்கப்பட்டுள்ளதாக, கர்நாடக நீர்வளத் துறை அதிகாரிகள் கணக்கு காட்டுகின்றனர். தமிழக நீர்வளத் துறை செயலர், பன்மாநில நதிகள் பிரிவு தலைவர், திருச்சி மண்டல நீர்வளத் துறை தலைமை பொறியாளர் உள்ளிட்ட அதிகாரிகள், அதற்கு பெரிதாக எதிர்ப்பு தெரிவிக்கவில்லை. கர்நாடகா அரசிடம் முறைப்படி நீரைப் பெற நடவடிக்கை எடுக்காமல், தமிழக அரசு மவுனம் காத்து வருவதால், டெல்டா விவசாயிகள் கவலை அடைந்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி