புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறை: 9ம் வகுப்பு தேர்வுக்கு சி.பி.எஸ்.இ., புது முடிவு
சென்னை: மத்திய இடைநிலை கல்வி வாரியமான சி.பி.எஸ்.இ., 'தேசிய கல்விக் கொள்கை - 2020' அம்சங்களை தொடர்ச்சியாக அமல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மாணவர்களின் தேர்வு பயத்தை தவிர்க்க, புத்தகத்தை பார்த்து தேர்வு எழுதும் முறையை, 2026 - 27ம் கல்வியாண்டு முதல் அமல்படுத்த உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கடந்த ஜூன் மாதம் நடந்த, சி.பி.எஸ்.இ. நிர்வாகக்குழு கூட்டத்தில், ஒன்பதாம் வகுப்பு மாணவர்கள் கணிதம், அறிவியல், சமூக அறிவியல் பாடத்தேர்வுகளை, புத்தகங்களை பார்த்து எழுத, ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. மாணவர்களின் தேர்வு பயத்தை தணிக்க, இந்த புதிய நடைமுறை அமல்படுத்தப்பட உள்ளதாக, சி.பி.எஸ்.இ. தெரிவித்துள்ளது. ஏற்கனவே, நாடு முழுதும் பல்வேறு சி.பி.எஸ்.இ. பள்ளிகளில், 2023ம் ஆண்டு முதல் சோதனை முறையில், பொதுத்தேர்வு தவிர்த்து, மற்ற தேர்வுகளை, 9ம் வகுப்பு முதல், பிளஸ் 2 வரை, புத்தகம் பார்த்து எழுதும் முறை நடைமுறையில் உள்ளது குறிப்பிடத்தக்கது.