சென்னை:சட்டசபையில் பேசுவதற்கு குறைந்த நேரம் வழங்கப்பட்டதால், பால் வளத்துறை முன்னாள் அமைச்சர் நாசர் ஆதங்கப்பட்டார்.சட்டசபையில் கவர்னர் உரை மீது நேற்று விவாதம் நடந்தது. இதில், அ.தி.மு.க., சார்பில் உதயகுமார், அக்ரி கிருஷ்ணமூர்த்தி, காங்., - பிரின்ஸ், வி.சி., - சிந்தனை செல்வன், த.வா.க., - - வேல்முருகன், ம.தி.மு.க., - சதன் திருமலைகுமார் உள்ளிட்டோர் பேசினர். தி.மு.க., சார்பில், ஆவடி தொகுதி எம்.எல்.ஏ.,வும், முன்னாள் அமைச்சருமான நாசர் பேசினார். முதல்வர் ஸ்டாலினால், தன் தொகுதியில் நடந்த பணிகள் குறித்து விளக்கி கொண்டு இருந்தார். அப்போது, துணை சபாநாயகர் பிச்சாண்டி மணி அடித்து, நாசர் உரையை முடிக்கும்படி கூறினார். அதற்கு நாசர், ''எல்லாருக்கும் அதிக நேரம் பேச வாய்ப்பு வழங்கப்பட்டது; எனக்கு வழங்கவில்லை. இது, ஒரு கண்ணில் சுண்ணாம்பு; மறு கண்ணில் பால் என்பதை போல இருக்கிறது,'' என்றார். இதையடுத்து, கூடுதலாக சில நிமிடங்கள் பேசுவதற்கு வாய்ப்பு வழங்கப்பட்டது.