உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: 18 டேங்கர்கள் எரிந்து நாசம்; ரூ.12 கோடி டீசலும் வீணானது

திருவள்ளூர் அருகே சரக்கு ரயில் தடம் புரண்டு பயங்கர தீ விபத்து: 18 டேங்கர்கள் எரிந்து நாசம்; ரூ.12 கோடி டீசலும் வீணானது

திருவள்ளூர்: சென்னையில் இருந்து வாலாஜா ரோடு ஸ்டேஷனுக்கு டீசல் எடுத்துச் சென்ற சரக்கு ரயில், திருவள்ளூர் அருகே நேற்று அதிகாலை விபத்துக்கு உள்ளானது. இதனால் ஏற்பட்ட தீ விபத்தில், 18 டேங்கர்கள் எரிந்து நாசமாகின; 12 கோடி ரூபாய் மதிப்பிலான டீசல் எரிந்து வீணானது. சென்னை துறைமுகத்தில் இருந்து நேற்று அதிகாலை, டீசல் நிரப்பப்பட்ட 50 டேங்கர்களுடன் வாலாஜா ரோடு ஸ்டேஷன் நோக்கி சென்ற சரக்கு ரயில், அதிகாலை 5:10 மணி அளவில் திருவள்ளூர் ரயில் நிலையத்தை கடந்தது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=7rxz59up&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பெரும் சத்தம்வரதராஜபுரம் அடுத்த இருளர் காலனி என்ற இடத்திற்கு சென்ற போது, சரக்கு ரயிலில் பெரும் சத்தம் கேட்டது. இதையடுத்து, இன்ஜின் மற்றும் அதை ஒட்டியிருந்த ஒரு டேங்கர் மட்டும் இணைப்பு துண்டாகி முன்னால் சென்றன. அதேநேரத்தில், துண்டிக்கப்பட்ட இரண்டாவது டேங்கரில் திடீரென தீப்பிடித்தது. அதற்குள், இன்ஜின் மற்றும் ஒரு டேங்கர், 500 மீட்டர் துாரம் சென்ற நிலையில், ரயில் ஓட்டுநர் அவசர கால பிரேக்கை பயன்படுத்தி ரயிலை நிறுத்தினார்.அத்துடன், அருகில் உள்ள ரயில் நிலைய மேலாளர் மற்றும் கட்டுப்பாட்டு அறைக்கு தகவல் கொடுத்தார்; மின் இணைப்பை துண்டிக்கவும் ஏற்பாடு செய்தார். அதற்குள், துண்டிக்கப்பட்ட இரண்டாவது டேங்கரில் பிடித்த தீ மேல்நோக்கி எரிந்ததால், விண்ணை முட்டும் அளவுக்கு கரும்புகை எழுந்து, அந்தப்பகுதி முழுதும் புகை மூட்டம் சூழ்ந்தது. அத்துடன் தீ மளமளவென அடுத்தடுத்து, 19வது டேங்கர் வரைக்கும் பரவியது.உடனடியாக, தீயணைப்பு துறை மற்றும் காவல் துறைக்கு தகவல் கொடுக்கப்பட்டது.விரைந்து வந்த திருவள்ளூர் தீயணைப்பு வீரர்கள் தண்ணீரை பீய்ச்சியடித்து தீயை அணைக்க முயன்றனர். ஆனால், டேங்கர்களில் டீசல் இருந்ததால், தீயை அணைக்க முடியவில்லை. நுரை தெளிப்புஇதையடுத்து, சென்னை, அரக்கோணம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து தீயணைப்பு வாகனங்கள் வரவழைக்கப்பட்டு, ரசாயன கலவையுடன் கூடிய நுரையை தெளித்து, தீயை அணைக்கும் பணி நடந்தது.அதற்குள், திருவள்ளூர் நகரம் முழுதும் கரும்புகை சூழ்ந்ததால், நகரவாசிகள் அனைவரும் அச்சமடைந்தனர்.ஏறத்தாழ, 10 மணி நேர போராட்டத்திற்கு பிறகு, தீ முற்றிலுமாக அணைக்கப்பட்டது. இதில், 18 டேங்கர்கள் முற்றிலும் எரிந்து விட்டன. அதிலிருந்த பல ஆயிரக்கணக்கான லிட்டர் டீசல் எரிந்து நாசமானது. மீதமிருந்த, 32 டேங்கர்கள் தொடர்ச்சி 3ம் பக்கம்பாதுகாப்பாக மீட்கப்பட்டன. ரயில் பாதைகளும் சேதமடைந்ததால், ரயில்களின் சேவையை உடனடியாக துவங்க முடியவில்லை. ஒரு பாதையில் மட்டும் ரயில்கள் இயக்கப்பட்டன.சம்பவம் பற்றிய தகவல் அறிந்ததும், தமிழக அமைச்சர் நாசர், திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், தெற்கு ரயில்வே பொது மேலாளர் ஆர்.என்.சிங், சென்னை கோட்ட மேலாளர் விஸ்வநாத் ஈர்யா உள்ளிட்ட உயர் அதிகாரிகள் நேரில் பார்வையிட்டு ஆய்வு செய்தனர். இச்சம்பவத்தால், திருவள்ளூர் ரயில் நிலையம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில், பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதிர்ஷ்டவசமாக எவ்வித உயிரிழப்பும் ஏற்படவில்லை.பாக்ஸ்------தீ விபத்து ஏற்பட்டது எப்படி?சரக்கு ரயிலில் இணைக்கப்பட்டிருந்த, 52 டேங்கர்களில், இரண்டு பிரேக் வேகன்கள் தவிர, மற்ற, 50 டேங்கர்களிலும் டீசல் நிரம்பி இருந்தது. ரயில் இன்ஜினில் இருந்து, 3வது டேங்கர் திடீரென தடம் புரண்டதில் ஏற்பட்ட தீப்பொறியால், தீ விபத்து ஏற்பட்டு இருக்கலாம் அல்லது டேங்கரில் உராய்வு ஏற்பட்டதில் தீ விபத்து ஏற்பட்டு தடம் புரண்டு இருக்கலாம் என, முதல்கட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது. இந்த சம்பவம் குறித்து விசாரிக்க, தலைமை பொறியியல் தொழில்நுட்ப அதிகாரி தலைமையில், மூன்று பேர் குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்தக்குழு விசாரித்து அறிக்கை தாக்கல் செய்ய, தெற்கு ரயில்வே உத்தரவிட்டுள்ளது.

திருத்தணி ரயில் தப்பியது

சென்னை சென்ட்ரலில் இருந்து நேற்று அதிகாலை, 3:55க்கு புறப்பட்ட திருத்தணி புறநகர் மின்சார ரயில், 5:10 மணி அளவில் திருவள்ளூரை கடந்தது. அப்போது, விபத்திற்கு உள்ளான சரக்கு ரயிலில் இருந்து சிறிய அளவில் தீப்பொறி எழுந்ததை ரயிலில் பயணித்தவர்கள் சிலர் பார்த்துள்ளனர். அதற்குள், அந்த ரயில் சம்பவ இடத்தை கடந்து விட்டது. திருத்தணிக்கு சென்ற போது தான், அந்த ரயிலில் பயணித்தவர்களுக்கு, ரயில் விபத்து குறித்த விவரம் தெரிந்துள்ளது. ஒரு சில நிமிடம் தாமதமாகி இருந்தாலும், அந்த பயணியர் ரயிலும் விபத்தில் சிக்கியிருக்கும்; அதிர்ஷ்டவசமாக அந்த ரயிலில் பயணித்த ஏராளமானோர் உயிர் தப்பினர்.

30 குடும்பத்தினர் அகற்றம்

ரயில் விபத்து நடந்த இருளர் காலனியில், 30க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். டேங்கர்கள் தீப்பற்றி எரிந்ததும், கரும்புகை சூழ்ந்ததால், அப்பகுதியை சேர்ந்தோர் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதையடுத்து, அமைச்சர் நாசர் மற்றும் கலெக்டர் பிரதாப் ஆகியோர், அங்கு குடியிருந்தவர்களை அகற்றி, பெரியகுப்பம் நகராட்சி நடுநிலை பள்ளியில் பாதுகாப்பாக தங்க வைத்தனர். அவர்களுக்கு தேவையான உணவு, குடிநீர் உள்ளிட்ட வசதிகள் செய்து தரப்பட்டன.

பாதியில் ரயில் நிறுத்தம்

பயணியர் பரிதவிப்பு* விபத்து காரணமாக, சென்னை - அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்பட்ட ரயில்கள் அனைத்தும் ஆங்காங்கே நிறுத்தப்பட்டன.★ திருவள்ளூரில் இருந்து சென்னைக்கு சிறப்பு பேருந்துகள் இயக்கப்பட்டு, ரயில் பயணியர் அனுப்பி வைக்கப்பட்டனர்.★ விபத்து நடந்த இடத்தில் சேதமடைந்த உயர்மட்ட மின் கேபிள்களை, ரயில்வே ஊழியர்கள் போர்க்கால அடிப்படையில் சீரமைக்கும் பணியில் ஈடுபட்டனர்.★ சென்னை சென்ட்ரலில் இருந்து அரக்கோணம் மார்க்கத்தில் இயக்கப்படும், வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட எட்டு விரைவு ரயில்கள் நிறத்தப்பட்டன. 5 ரயில்கள் மாற்று வழித்தடத்தில் இயக்கப்பட்டன.* பொதுமக்கள் மற்றும் பக்தர்கள் வசதிக்காக திருத்தணி அரசு போக்குவரத்து பணிமனையில் இருந்து, வழக்கமாக செல்லும் பஸ்களை விட கூடுதலாக, 20 சிறப்பு பஸ்கள் நேற்று காலை முதல் திருத்தணி, திருவள்ளூர் வழியாக சென்னைக்கு இயக்கப்பட்டன.

என்.டி.ஆர்.எப்., வீரர்கள் விரைவு

திருவள்ளூர் கலெக்டர் பிரதாப், ராணிப்பேட்டை மாவட்டம் அரக்கோணத்தில் அமைந்துள்ள என்.டி.ஆர்.எப்., எனப்படும், தேசிய பேரிடர் மீட்பு படை உயரதிகாரிகளிடம் கேட்டுக் கொண்டதின் பேரில், 60 பேர் கொண்ட இரண்டு குழுக்கள், ஆய்வாளர் கோபிநாத் தலைமையில் திருவள்ளூர் விரைந்து மீட்பு பணியில் ஈடுபட்டனர்.

ரூ.12 கோடி இழப்பு

திருவள்ளூர் அருகே விபத்துக்குள்ளன சரக்கு ரயிலில், 50 டேங்கர்களில், 70,000 லிட்டர் டீசல் எடுத்து செல்லப்பட்டது. விபத்தில், 18 டேங்கர்களில் இருந்த 12.60 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து நாசமாகி உள்ளது. இதனால், 11 கோடி ரூபாய் முதல் 12 கோடி வரை சேதம் ஏற்பட்டு இருக்கலாம் என, அதிகாரிகள் தெரிவித்தனர். மேலும், ரயில் பாதை, மின் பாதை சேதமடைந்துள்ளது. அவற்றை மதிப்பிட்ட பிறகு, முழு சேதம் விபரம் தெரியவரும்.

தண்டவாள விரிசல் காரணமா?

ரயில்வே அதிகாரிகள் ஆய்வுசரக்கு ரயில் தீ விபத்து நடந்த இடத்தினை சுற்றி, ரயில்வே துறையினர், 200 மீட்டர் சுற்றளவிற்கு தடுப்பு அமைத்தனர். ரயில்வே உயர் அதிகாரிகள் குழுவினரும், அங்கு ஆய்வு பணியில் ஈடுபட்டனர். தண்டவாளத்தில் ஏற்பட்ட விரிசல் காரணமாக, சரக்கு ரயில் தடம் புரண்டதா அல்லது இணைப்பு துண்டிக்கப்பட்டதால் தடம் புரண்டதா என்று குறித்து ஆய்வு செய்து வருகின்றனர். இதுகுறித்து, ரயில்வே துறை அதிகாரிகள் கூறுகையில், 'சரக்கு ரயில் சென்ற பாதையில், இணைப்புகளில் உள்ள, 'போல்ட்' மற்றும், 'நட்'டுகள் உருகி உள்ளன. அவை, ஏற்கனவே கழன்றதா அல்லது தீ விபத்து காரணமாக உருகியதா என்பது குறித்து ஆய்வு செய்து வருகிறோம். ஆய்வுக்கு பின்னரே முடிவு தெரியும்' என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

கோபாலகிருஷ்ணன் பெங்களூர்
ஜூலை 14, 2025 06:38

50 டேங்கர்களில் 70000 லிட்டர் டீசல் எடுத்து செல்லப்பட்டது.. விபத்தில் 18 டேங்கர்களில் இருந்த 12.60 லட்சம் லிட்டர் டீசல் எரிந்து நாசமாகி உள்ளது.....புரியல சார் 50 டேங்கர்களில் 70000 லிட்டர் என்றால் 18 டேங்கர்களில் 12.60 லிட்டர் எப்படி ??? அது 70000 மா அல்லது 7000000 மா ????


புதிய வீடியோ