| ADDED : டிச 26, 2025 02:03 AM
சென்னை: 'நாட்டு மக்களை பிளவுபடுத்தி, குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக்கரம் கொண்டு அடக்க வேண்டியது, நம் அனைவரது பொறுப்பும், கடமையும் ஆகும்' என, முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார். அவரது அறிக்கை: சிறுபான்மையினர் அச்சமின்றி வாழ துணையிருப்பதில்தான், பெரும்பான்மையினரின் பலமும் இருக்கிறது; குணமும் இருக்கிறது. பெரும்பான்மை என்ற பெயரில், சில வலதுசாரி வன்முறை கும்பல்கள் தாக்குதல்களிலும், கலவரங்களிலும் ஈடுபடுகின்றனர். பிரதமர் கிறிஸ்துமஸ் விழாவில் பங்கெடுக்கும்போதே, இந்த செயலில் ஈடுபடுவது, நாட்டு மக்களுக்கு தவறான செய்தியையே கொண்டு சேர்க்கும். மணிப்பூர் கலவரங்களை தொடர்ந்து, இப்போது ஜபல்பூர், ராய்ப்பூர் மற்றும் பிற இடங்களிலும் சிறுபான்மையினர் மீது தாக்குதல் என்பதை, நல்லிணக்கத்தை விரும்பும் நாட்டு மக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ள முடியாது. மத்திய பா.ஜ., அரசு பொறுப்பேற்ற பின், சிறுபான்மையினருக்கு எதிரான வெறுப்பு பேச்சுகள், 74 சதவீதம் அதிகரித்திருப்பதாக சொல்லப்படும் புள்ளிவிபரங்கள், எதிர்காலம் எதிர்நோக்கியுள்ள ஆபத்துகளை உணர்த்துகிறது. எனவே, நாட்டு மக்களை பிளவுப்படுத்தி, குளிர்காய நினைக்கும் கலவர கும்பலை இரும்புக் கரம் கொண்டு அடக்க வேண்டியது, நம் அனைவரது பொறுப்பும், கடமையும் ஆகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.