வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி 21ல் உருவாகிறது
வாசிக்க நேரம் இல்லையா?
செய்தியைக் கேளுங்கள்
சென்னை: வங்கக்கடலில் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி, வரும் 21ம் தேதி உருவாக வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதனால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவோர், கவனமுடன் தங்கள் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டு உள்ளது. தமிழகத்தில் வட கிழக்கு பருவமழை தீவிரமாக உள்ளது. இதன் காரணமாக மாநிலம் முழுதும் பரவலாக மழை பெய்து வருகிறது. நேற்று காலை, 8:30 மணியுடன் நிறைவு பெற்ற 24 மணி நேரத்தில், 40 இடங்களில் கன மழையும், ஐந்து இடங்களில் மிக கன மழையும் பெய்துள்ளது.16 செ.மீ., அதிகபட்சமாக, விருதுநகர் மாவட்டம் ராஜபாளையத்தில், 18 செ.மீ., மழை பதிவாகியுள்ளது. தேனி மாவட்டம் தேக்கடி, திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டியில், 16 செ.மீ., மழை பெய்து உள்ளது.வங்கக்கடலில், புதிய காற்றழுத்த தாழ்வு நிலை வரும் 24ம் தேதி உருவாகும் என, இந்திய வானிலை ஆய்வு மையம் கணித்திருந்த நிலையில், மூன்று நாட்களுக்கு முன்பாகவே, அதாவது, 21ம் தேதியே புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்பு இருப்பதாக, சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.அதன் அறிக்கை:தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் அதை ஒட்டிய லட்சத்தீவு பகுதிகளில், வளிமண்டல மேலடுக்கு சுழற்சி நிலவியது.இதன் காரணமாக, தென்கிழக்கு அரபிக்கடல் மற்றும் லட்சத் தீவு பகுதிகளில், கேரள - கர்நாடக கடலோர பகுதிகளுக்கு அப்பால், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி, நேற்று காலை 5:30 மணிக்கு உருவானது.இது, நேற்று காலை 8:30 மணியளவில், அதே பகுதியில் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதியாக வலுப்பெற்றது.அடுத்த, 12 மணி நேரத்தில் இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக வலுப்பெறும்.மேலும், தெற்கு அந்தமான் மற்றும் அதை ஒட்டிய தென்கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது.இதன் காரணமாக, வரும் 21ம் தேதி, தென் கிழக்கு வங்கக்கடல் பகுதிகளில், ஒரு காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும். இது, மேற்கு - வடமேற்கு திசையில் நகர்ந்து வலுப்பெறும்.இதனால், கோவை மாவட்ட மலைப்பகுதிகள், நீலகிரி, ஈரோடு, திருப்பூர், தேனி, தென்காசி, திருநெல்வேலி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் இன்று கனமழை பெய்யும்.நாளை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலுார், மயிலாடுதுறை, நாகை, திருவாரூர், தஞ்சாவூர், புதுக்கோட்டை, ராமநாதபுரம், மற்றும் கள்ளக்குறிச்சி, நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திருப்பூர், ஈரோடு, கரூர், நாமக்கல், மதுரை, சிவகங்கை, விருதுநகர், திண்டுக்கல் மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.வரும் 21ம் தேதி, விழுப்புரம், செங்கல்பட்டு, கடலுார், மயிலாடுதுறை, நாகை, மாவட்டங்களிலும், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளிலும், கன மழைக்கு வாய்ப்புள்ளது.வரும் 22, 23ம் தேதிகளில், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், ராணிப்பேட்டை மாவட்டங்கள், புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்புள்ளது.வரும் 23ம் தேதி, வேலுார் மாவட்டத்தில் கன மழை முதல் மிக கன மழைக்கு வாய்ப்பு உள்ளது. வரும் 24ல், நீலகிரி, கோவை மாவட்ட மலைப்பகுதிகள், திண்டுக்கல், தேனி மற்றும் தென்காசி மாவட்டங்களில், கன மழைக்கு வாய்ப்புள்ளது.மீனவர்களுக்கு... சூறைக்காற்று வீசும் என்பதால், தென்மாவட்ட கடலோர பகுதிகள், மன்னார் வளைகுடா, குமரிக்கடல் பகுதிகளுக்கு, வரும் 22ம் தேதி வரை மீனவர்கள் செல்ல வேண்டாம். அதேபோல, அந்தமான் கடல் பகுதிகளுக்கு, 21ம் தேதி வரை செல்ல வேண்டாம்.தென்கிழக்கு வங்கக்கடல் பகுதி, தென்மேற்கு வங்கக் கடல் பகுதிகளுக்கு, 22ம் தேதி மீனவர்கள் செல்ல வேண்டாம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.வரும் 24ம் தேதி வரை மாநிலத்தின் பல பகுதிகளில் கனமழைக்கு வாய்ப்புள்ளதால், தீபாவளிக்கு சொந்த ஊருக்கு சென்று, மீண்டும் சென்னை உள்ளிட்ட நகரங்களுக்கு திரும்புவோர், கவனமுடன் தங்களின் பயணத்தை மேற்கொள்ள வேண்டும் என, அரசு தரப்பில் அறிவுறுத்தப்பட்டுள்ளது.