உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / தமிழகம் / ஆசிரியர்களுக்கு பண்டிகை, திருமண முன்பண திட்டங்களில் சிக்கல்; உத்தரவு போட்டாச்சு; நிதி ஒதுக்கீடு என்னாச்சு

ஆசிரியர்களுக்கு பண்டிகை, திருமண முன்பண திட்டங்களில் சிக்கல்; உத்தரவு போட்டாச்சு; நிதி ஒதுக்கீடு என்னாச்சு

மதுரை : தமிழக அரசு புதிதாக அறிவித்துள்ள பண்டிகை முன்பணம், திருமண முன்பணம் திட்டங்கள் தொடர்பாக அரசாணை வெளியிட்டும், இதுவரை அதற்கான கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யாததால் இத்திட்டங்களை பெறுவதில் ஆசிரியர்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. பல ஆசிரியர்கள் திருமண முன்பணத் திட்டத்திற்கு விண்ணப்பித்தும் கிடைக்காமல் காத்திருக்கின்றனர். இந்தாண்டு பட்ஜெட் கூட்டத்தொடரில் 110 விதியின் கீழ் அரசு ஊழியர்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பல்வேறு நலத்திட்டங்களை அறிவித்தார். இதில் அரசு ஊழியர்கள் பண்டிகை முன்பணம் ரூ.10 ஆயிரத்தில் இருந்து ரூ.20 ஆயிரமாகவும், அரசு ஊழியர்கள், மகன்/மகளுக்கான திருமண முன்பணம் ரூ.20 ஆயிரத்தில் இருந்து ரூ.5 லட்சமாகவும் உயர்த்தப்பட்டது. இதுதொடபர்பான அரசாணை ஜூனில் வெளியானது. ஆனால் அரசு உயர்த்தி வழங்கியதற்கான கூடுதல் தொகை இதுவரை அரசு பள்ளிகளுக்கான 'கணக்கு தலைப்பு'களுக்கு (அக்கவுண்ட் ஹெட்) ஒதுக்கீடு செய்யவில்லை. இதனால் தீபாவளி முன்பணமே விருப்பமுள்ள அனைத்து ஆசிரியர்களுக்கும் கிடைக்குமா என்பதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. தலைமையாசிரியர்கள் கூறியதாவது: அரசு பள்ளிகளுக்கு சில்லரை செலவினம், மின் கட்டணத் தொகை, ஆசிரியர், தலைமையாசிரியர்களுக்கான சம்பளம், அகவிலைப்படி உள்ளிட்டவற்றுக்கான நிதியை ஜூன், ஜூலையில் அந்தந்த பள்ளிகளின் 'கணக்கு தலைப்புக்கு' ஒதுக்கீடு செய்யப்படும். ஆனால் இந்தாண்டுக்கும் பழைய தொகையே ஒதுக்கப்பட்டுள்ளது. பண்டிகை முன்பணம் ரூ.20 ஆயிரம், திருமண முன்பணம் ரூ.5 லட்சம் என உயர்த்தியதால் வழக்கத்தை விட அதிக எண்ணிக்கையில் ஆசிரியர்கள் இத்தொகையை பெற விருப்பம் தெரிவிக்கின்றனர். ஆனால் அதற்கேற்ப பள்ளிகளின் 'அக்கவுண்ட் ஹெட்'டில் நிதியில்லை. அரசு உத்தரவு வெளியானவுடன் பல பள்ளிகளில் திருமண முன்பணம் கேட்டும் ஆசிரியர்கள் விண்ணப்பித்துள்ளனர். தலைமையாசிரியர் அனுமதி அளித்து கருவூலங்களுக்கு பரிந்துரைத்தால் 'அதற்கான கூடுதல் ஒதுக்கீடு பெறப்படவில்லை. தற்போதைக்கு வழங்க இயலாது' என தெரிவிக்கின்றனர். இதுபோல் அதிகரிக்கப்பட்ட கூடுதல் தொகையை ஐ.எப்.எச்.ஆர்.எம்.எஸ்.,ல் பதிவேற்றம் செய்வதற்கான வசதியையும் இதுவரை 'அப்டேட்' செய்யவில்லை. இதனால் ஆசிரியர்கள் ஏமாற்றத்தில் உள்ளனர். இதுபோல் தீபாவளியை முன்னிட்டு செப்டம்பரில் அதற்கான முன்பணம் ஆசிரியர்களுக்கு வழங்க வேண்டும். அதற்கும் எல்லா ஆசிரியர்களுக்கும் வழங்கும் வகையில் நிதி இருப்பு இல்லை. எனவே அரசு அறிவித்த இந்த 2 திட்டங்களுக்கான கூடுதல் தொகையை பள்ளிகளுக்கு விரைவில் ஒதுக்கீடு செய்ய வேண்டும் என்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

R.RAMACHANDRAN
ஆக 25, 2025 06:32

கடமையை நேர்மையாக செய்யாதவர்களெல்லாம் உரிமைகளுக்காக போராடுகின்றனர் இந்நாட்டில்.அவர்களுக்கு அரசாங்கமும் அடிபணிகிறது.


சமீபத்திய செய்தி