சென்னை : மின்வாரியம், தனித்தனி நிறுவனங்களாக பிரிக்கப்பட்ட நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின் பணியாளர்கள் பாதுகாப்பை உறுதி செய்யும் முத்தரப்பு ஒப்பந்தம் நேற்று கையெழுத்தானது.தமிழக மின் வாரியம், 2010ல், மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகம், மின் தொடரமைப்பு கழகம் என்ற நிறுவனங்களாக பிரிக்கப்பட்டது. அதற்கு ஏற்ப, ஒவ்வொரு நிறுவனங்ளுக்கும் மின் வாரியத்தின் பணியாளர்கள், சொத்துக்கள் பிரிக்கப்பட வேண்டும்.'ஒரு நிறுவனம் நஷ்டம் அடைந்தால், சம்பளம், ஓய்வூதியம் கிடைப்பதில் பாதிப்பு ஏற்படலாம்' என, ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். எனவே, பணி பாதுகாப்பு, நிரந்தர சம்பளம், ஓய்வூதியம் போன்ற பணியாளர்கள் நலன் சார்ந்த விஷயங்களுக்கு பொறுப்பேற்று, தமிழக அரசு உத்தரவாதம் அளிக்க வலியுறுத்தினர்.அதற்கு ஏற்ப, மின் வாரியம், தமிழக அரசு, தொழிற்சங்கங்கள் இடையில் முத்தரப்பு ஒப்பந்தம் ஏற்பட வேண்டும் என்றும் வலியுறுத்தினர். இதை அரசு ஏற்காமல் இருந்தது. இந்நிலையில், 14 ஆண்டுகளுக்கு பின், முத்தரப்பு ஒப்பந்தத்திற்கு அரசு அனுமதி அளித்தது. ஒப்பந்த ஷரத்துக்கள் அடங்கிய கருத்துரு சங்கங்களுக்கு வழங்கப்பட்டது. சென்னை, மின் வாரிய தலைமை அலுவலகத்தில், வாரிய தலைவர் ராஜேஷ் லக்கானி முன்னிலையில் ஒப்பந்தம் கையெழுத்திடும் நிகழ்வு நடந்தது.மொத்தம், 27 தொழிற்சங்கங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்ட நிலையில், நான்கு தவிர்த்து, மற்ற சங்கங்கள் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.இதுகுறித்து, மின் வாரிய தொழிலாளர், பொறியாளர் ஐக்கிய சங்க பொதுச் செயலர் சுப்ரமணியன் கூறுகையில், ''நிறுவனங்களாக பிரிக்கப்பட்டாலும் பணியாளர்கள், ஓய்வூதியதாரர்களுக்கு கிடைக்கும் சலுகைகள் குறைக்கப்படாது என்று உத்தரவாதம் அளிக்கப்பட்டுள்ளது; அதை ஏற்று, முத்தரப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டோம்,'' என்றார்.