பெண் போலீசின் துப்பாக்கி வெடித்து விபத்து நள்ளிரவில் சென்னை ரிசர்வ் வங்கியில் பரபரப்பு
சென்னை:சென்னை ரிசர்வ் வங்கியில், பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த பெண் போலீசின் துப்பாக்கி பலத்த சத்தத்துடன் வெடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது.சென்னை, பிராட்வே ராஜாஜி சாலையில் ரிசர்வ் பேங்க் ஆப் இந்தியா உள்ளது. இந்த வங்கியில், எப்போதும் போலீசார் பலத்த பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருப்பர். ஆயுதப்படை போலீசார், நேற்று முன்தினம் இரவு பணியில் ஈடுபட்டுஇருந்தனர். இந்நிலையில், ரிசர்வ் வங்கி வளாகத்தின் உள்ளே, நேற்று அதிகாலை திடீரென அபாய எச்சரிக்கை அலாரம் ஒலித்தது. அப்போது, பாதுகாப்பு பணியில் இருந்த ஆயுதப்படை பெண் போலீஸ் தர்ஷினி, சுதாரித்து துப்பாக்கியில் தோட்டாக்களை நிரப்பி உள்ளார்.அவர் பாதுகாப்பில் இருந்த பகுதி முழுதும் சோதனை மேற்கொண்டபோது, அலாரம் தானாகவே ஒலித்ததும் தெரிந்தது.இதையடுத்து, துப்பாக்கியில் லோடு செய்யப்பட்ட தோட்டாக்களை வெளியே எடுக்க முயன்றார். அப்போது, துப்பாக்கி எதிர்பாராதவிதமாக பலத்த சத்தத்துடன் வெடித்து, சுவரில் தோட்டா பாய்ந்தது. அதிர்ஷ்டவசமாக எந்தவித பாதிப்புமின்றி தர்ஷினி உயிர் தப்பினார்.துப்பாக்கி வெடித்ததற்கான காரணங்கள் குறித்து, தடயவியல் நிபுணர்கள் சம்பவ இடத்தில் ஆய்வு மேற்கொண்டனர். மேலும், கோட்டை போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.