மின் பணிகளில் தாமதம் செய்வோர் மீது நடவடிக்கை
சென்னை:துணை மின் நிலையம் அமைப்பது உள்ளிட்ட மின் திட்ட பணிகளை, குறித்த காலத்திற்குள் முடிக்காமல், தாமதம் செய்யும் ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்க, பொறியாளர்களுக்கு, மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இதுகுறித்து, பொறியாளர்கள் மற்றும் பணியாளர்களுக்கு, மின் வாரிய தலைவர் ராதா கிருஷ்ணன் அனுப்பியுள்ள கடிதம்: தமிழக மின் வாரியம், பொதுவான பல விஷயங்களில் நன்றாக செயல்பட்டு வந்தாலும், இன்னும் மேம்படுத்த வேண்டிய பல அம்சங்கள் உள்ளன. நேர கட்டுப்பாட்டுடன் சேவைகள் வழங்கப்பட வேண்டும். தாமதம் ஏற்பட்டால், நுகர்வோருக்கு தெளிவான காரணம் தெரிவிக்கப்பட வேண்டும். பொது மக்களின் புகார்களை புறக்கணிக்கக் கூடாது. செயல்படாத ஒப்பந்ததாரர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும். பொது மக்கள் பயன்படுத்தும் இடங்களில் உள்ள மின் கம்பிகள், கேபிள்கள் அனைத்தும் பாதுகாப்பாக மூடப்பட்டிருக்க வேண்டும். அனைத்து பாதுகாப்பு நடைமுறைகளும் கடைப்பிடிக்கப்பட வேண்டும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.