6 மாதத்தில் 11 ஊழியர்கள் பலி அதிகாரிகள் மீது நடவடிக்கை
சென்னை:அதிக பணிச்சுமை, பாதுகாப்பு உபகரணங்களை முறையாக பயன்படுத்தாதது உள்ளிட்ட காரணங்களால், மின் வாரியத்தில் கடந்த ஆறு மாதங்களில் மட்டும், 11 ஊழியர்கள் இறந்துள்ளனர். மேலும், 89 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். தமிழகம் முழுதும் மின் வினியோகம் செய்யும் பணியை, மின் வாரியம் மட்டுமே மேற்கொள்கிறது. ஒரு பிரிவு அலுவலகத்தில், உதவிப் பொறியாளரின் கீழ், சராசரியாக, 20 பேர் இருக்க வேண்டும். பெரும்பாலான அலுவலகங்களில், அனுமதிக்கப்பட்ட எண்ணிக்கையில், பாதி ஊழியர்கள் கூட இல்லை. இதனால், களப்பிரிவில் பணிபுரிவோருக்கு, அதிக பணிச்சுமை உள்ளது. முறையான பாதுகாப்பு உபகரணங்களும் வழங்கப்படுவதில்லை. இதனால், மின் சாதனங்களில் பழுதுகளை சரிசெய்யும் ஊழியர்கள், மின் விபத்தில் சிக்கிக்கொள்கின்றனர். இந்த ஆண்டு ஏப்., முதல் இம்மாதம், 6ம் தேதி வரை, மின் விபத்தில் சிக்கி, 11 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர். மேலும், 89 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். எனவே, ஊழியர்களின் பாதுகாப்பை உறுதி செய்ய, அதிகாரிகளுக்கு மின் வாரியம் உத்தரவிட்டுள்ளது. இது குறித்து, மின் வாரிய அதிகாரி ஒருவர் கூறியதாவது: கையுறை, பெல்ட் கயிறு, 'எர்த் ராடு' உள்ளிட்ட அனைத்து பாதுகாப்பு உபகரணங்களும், களப்பிரிவு ஊழியர்கள், 'கேங்மேன்' ஊழியர்களுக்கு கிடைப் பதையும், அவை தரமாக இருப்பதையும் உறுதி செய்ய, மாவட்ட மேற்பார்வை பொறியாளர்களுக்கு உத்தரவிடப்பட்டு உள்ளது. பாதுகாப்பு உபகரணங்களை பயன்படுத்தாமல் இருந்தால், தவறு செய்த ஊழியர்கள் மற்றும் பொறியாளர்கள் மீது, துறை ரீதியான நடவடிக்கை எடுக்க உத்தரவிடப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார்.